×

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.28,227 கோடி ஒதுக்கீடு

சென்னை, பிப்.18: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைகால பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 10,226 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், சாலை மேம்பாடு, சமுதாயக் கூடங்கள், நூலகங்கள், பூங்காக்கள், சந்தைகள், எரிவாயு தகன மேடைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், இதுவரை 1,227 பணிகள் ரூ.2,491 கோடியில் எடுக்கப்பட்டு, அவற்றில் 1,123 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 87 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், ரூ.15,591 கோடியில் நிறைவேற்றப்பட்டு, ஒரு கோடியே 65 லட்சம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியின், அனைத்து நீர்ப் பகிர்மான நிலையங்களையும் இணைத்து, சென்னை மாநகரில் அமைந்துள்ள அனைத்து குடிநீர் விநியோக நிலையங்கள் மூலம் சமச்சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்திடும் வகையில், முதன்மை சுற்றுக்குழாய்த் திட்டம் ரூ.3,109 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், 150 எம்.எல்.டி. திறன் கொண்ட நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டமானது முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு, சென்னை மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைக்கப்பெறும் நிலையில், 400 எம்.எல்.டி. திறன் கொண்ட பேரூர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளும் விரைந்து நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள 40 ஆண்டுகளுக்கு மேலான கூட்டுக்குடிநீர்த் திட்டங்களை மேம்படுத்திடவும், புதுப்பித்து அவற்றின் செயல்திறனை தேவையான இடங்களில் உரிய நீர் ஆதாரங்களை புதுப்பித்திடவும், 116 கூட்டுக்குடிநீர்த் திட்ட மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 809 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிகளில் காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி போன்ற ஆறுகளில், கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், விற்பனைப் பகுதிகள், தெரு விளக்குகள், அழகிய பூங்காக்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய நதிக்கரை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ. 374 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் பல்வேறு மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் ரூ. 199 கோடியில் 101 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களும், தொழில் முனைவோரும் பயன்படுத்தும் வகையில் 104 கோடியில் 30 முதல்வர் படைப்பகங்கள் தமிழ்நாடெங்கும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chennai ,Finance Minister ,Thangam Thennarasu ,Tamil Nadu Legislative Assembly ,
× RELATED எழும்பூர் ரயில் நிலையத்தில்...