×

15 ஆண்டுக்கு முன் நடந்த கொலை வழக்கில் விடுதலையை ரத்து செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை

சென்னை, பிப்.14: திருவான்மியூரில் 15 ஆண்டுக்கு முன் நடந்த கொலை வழக்கில் 9 பேரை விடுதலை செய்த, கூடுதல் அமர்வு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்கள் குற்றவாளிகள் என்று அறிவித்துள்ளது. திருவான்மியூரை சேர்ந்த ஏழுமலை என்பவர், கடந்த 2010ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தனது வீட்டின் முன் நின்றிருந்தபோது முன்விரோதம் காரணமாக ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 16 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 2017ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை 7வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அனைவரையும் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிவேல்முருகன் மற்றும் எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் சாட்சிகளையும் தடயங்களையும் மீண்டும் மறுஆய்வு செய்யப்பட்டதில் கொலையை நேரில் பார்த்த பலியான ஏழுமலையின் மனைவி மற்றும் பிள்ளைகளின் வாக்குமூலங்கள் மிகவும் நம்பகத்தன்மையுடன் உள்ளது. சிறிய முரண்பாடுகளை காரணம் காட்டி, திட்டமிட்டு கொலை செய்த ஒரு சட்டவிரோத கும்பலை விடுவிக்க முடியாது. எனவே, விசாரணை நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பு தவறானது. குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 5 பேர் உயிரிழந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 9 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகிறார்கள். நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஸ்டீபன்ராஜ் மற்றும் சந்துரு ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையும், தலா 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மீதமுள்ள சரவணன், அப்பு, குருமூர்த்தி உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்களை உடனடியாக கைது செய்து வரும் 16ம் தேதி நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்த வேண்டும். அன்றைய தினம் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Madras High Court ,Chennai ,Additional Sessions Court ,Thiruvanmiyur ,Ezhumalai ,
× RELATED தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு ரூ.55 கோடியில் புதிய கட்டிட பணி