×

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் புதிய மாற்றங்களுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: விசாரணை உயர் அமர்வுக்கு மாற்றம்

புதுடெல்லி: ஒன்றிய அரசு கொண்டு வந்த டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 2023, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மிக முக்கியமான பகுதிகளை முடக்கியுள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘தகவல் அறியும் சட்டத்தின் பிரிவு 8(1)(ஜே)-ல் செய்யப்பட்ட திருத்தம், பொதுநலன் சார்ந்த தகவல்களைக் கூட ‘தனிநபர் தகவல்’ என்ற பெயரில் மறைக்க வழிவகுக்கிறது. புலனாய்வு இதழியல் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு இது ஒரு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமையும். தரவுப் பாதுகாப்பு வாரியத்தின் மீது அரசின் கட்டுப்பாடு அதிகரிப்பதோடு, குடிமக்களின் தரவுகளை அரசு தன்னிச்சையாகப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து மேற்கண்ட மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது தெரிவித்த கருத்தில், ‘‘இந்த விவகாரம் என்பது அடிப்படை உரிமைகளுக்கு இடையே நடக்கும் போட்டியாக இருக்கிறது. தனிநபர் தகவல் எது என்பதை நாம் தெளிவாக வரையறுக்க வேண்டும். ஏனெனில் இது ஒரு சிக்கலான மற்றும் உணர்வுப்பூர்வமான விஷயம் ஆகும். குறிப்பாக நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய சட்டத்திருத்தத்தை முழுமையான விசாரணையின்றி தடுத்து நிறுத்த முடியாது. எனவே இந்த விவகாரத்தில் தற்போது இடைக்காலமாக தடை எதுவும் விதிக்க முடியாது. இருப்பினும் இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, விசாரணையை உயர் அமர்வுக்கு மாற்றுகிறோம். அடுத்தகட்ட விசாரணை மார்ச் மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில் நடைபெறும் என்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

Tags : Supreme Court ,New Delhi ,Union Government ,
× RELATED தமிழ்நாட்டில் 30 தொகுதிகளில் இந்திய...