×

வெளிநாட்டில் கட்டிப்பிடிப்பது.. இந்தியாவில் பிரிவினை பேசுவதா? மோடியே மிகப்பெரிய ஊடுருவல்காரர்: கொல்கத்தா ஈத் தொழுகைக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கடும் தாக்கு

 

கொல்கத்தா: பிரதமர் மோடி தான் மிகப்ெபரிய ஊடுருவல்காரர்என்று மேற்குவங்க முதல்வர் மம்தா ஆவேசமாக தெரிவித்தார். ரமலான் பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தாவின் புகழ்பெற்ற ‘ரெட் ரோடு’ பகுதியில் நடைபெற்ற ஈத் தொழுகைக்குப் பிறகு, அங்கு கூடியிருந்த இஸ்லாமிய மக்களிடையே முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: பிரதமர் மோடியும், பாஜவும் உங்கள் வாக்குரிமையைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம். இறுதிவரை போராடுவோம். எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து நீதிமன்றங்களை அணுகியுள்ளோம். நீங்கள்(பிரதமர் மோடி) வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, ​​அங்குள்ள தலைவர்களுடன் கைகுலுக்கி நட்பு குறித்துப் பேசுகிறீர்கள். அது உங்கள் விருப்பம்; நான் அனைத்து நாடுகளையும் மதிக்கிறேன். ஆனால், நீங்கள் இந்தியாவுக்குத் திரும்பியதும், திடீரென்று ‘இந்து-முஸ்லிம்’ என்ற பிரிவினைவாதப் பேச்சு தொடங்குகிறது; மக்கள் ‘ஊடுருவல்காரர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். அதன்பின், மக்களின் பெயர்களை நீக்குமாறும், அவர்களை ‘ஊடுருவல்காரர்கள்’ என்று முத்திரை குத்துமாறும் நீங்கள் கோருகிறீர்கள். ஆனால் நான் சொல்கிறேன், நீங்களே(மோடி) மிகப்பெரிய ஊடுருவல்காரர்.

எங்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றி, ஒரு அதிகாரப்பூர்வமற்ற ஜனாதிபதி ஆட்சியைத் திணித்துள்ளீர்கள். ஆனால் நாங்கள் அஞ்சமாட்டோம். அனைத்து சமூக மக்களுடன் நான் நட்புறவுடன் இருக்கிறேன். எனவே வேறு யாரும் உங்களுக்குத் துணையாக நிற்காவிட்டாலும், மதங்கள், சாதிகள் மற்றும் நம்பிக்கைகளைக் கடந்து, மேற்குவங்க மக்களாகிய உங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக, நான் உங்களுக்குத் துணையாக நிற்பேன். மேற்குவங்கத்தை குறிவைத்தும், மக்களைப் பிளவுபடுத்தவும் முயன்று வருபவர்கள் நரகத்திற்குச் செல்லட்டும். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் மேற்குவங்கத்தில் ஒற்றுமையாக வாழ்கின்றனர். இந்த ஒற்றுமையைச் சிதைக்க யாரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பாஜவை அகற்றுவோம்; தேசத்தைக் காப்போம். இவ்வாறு பேசினார்.

 

Tags : India ,Modi ,Chief Minister ,Mamata Banerjee ,Kolkata ,Eid ,West Bengal ,Mamata ,Red Road ,Ramadan ,Mamata… ,
× RELATED ஆந்திரா ரேஷன் கடைகளில் மீண்டும் மண்ணெண்ணெய்: அமைச்சர் தகவல்