சென்னை: மலையாளத்தில் காலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி நடிக்கும் படம், ‘மட்டாஞ்சேரி மாஃபியா’. இதற்கு முன்பு காலித் ரஹ்மான் இயக்கத்தில் ‘உண்ட’ என்ற படத்தில் மம்மூட்டி நடித்தார். இந்நிலையில், 2வது முறையாக காலித் ரஹ்மானுடன் மம்மூட்டி இணைந்திருப்பதை வில்லன் நடிகர் ஹரீஷ் பெராடி கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு காரணம், கடந்த ஆண்டு கஞ்சா வழக்கில் காலித் ரஹ்மான் கைது செய்யப்பட்டதுதான். போதைப்பொருள் வழக்கில் கைதான ஒரு இயக்குனருடன் பணிபுரிவது, போதைப்பொருட்களை ஊக்குவிப்பதாக மக்கள் நினைக்க மாட்டார்களா என்று ஹரீஷ் பெராடி கேள்வி கேட்டுள்ளார். வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு கேரள அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. அப்பகுதியை சில தினங்களுக்கு முன்பு நேரில் பார்வையிட மம்மூட்டி சென்றார். அப்போது சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் கே.ரபீக் என்பவர் மம்மூட்டியுடன் நெருக்கமாக நடந்து வந்தார். அதை பார்த்த மம்மூட்டி, ‘எப்போதும் என்னுடன் ஏன் வருகிறீர்கள்? நான் உங்களுக்காகத்தான் வந்தேன் என்று ஊர் மக்கள் நினைக்க மாட்டார்களா?’ என்று கோபத்துடன் கேட்டார்.
இச்சம்பவத்தை பற்றி வெளியான தகவல்களை குறிப்பிட்டு ஹரீஷ் பெராடி வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒரு பொதுச்சேவகர் சிறிது நேரம் தன்கூடவே இருந்தபோது, ‘நான் உங்களுக்காகத்தான் வந்தேன் என்று ஊர் மக்கள் நினைக்க மாட்டார்களா?’ என்று கேட்க தோன்றிய மம்மூட்டிக்கு, கஞ்சா வழக்கில் கைதான ஒரு இயக்குனருடன் மீண்டும் பணியாற்ற முன்வரும்போது, போதைப்பொருள் பழக்கத்தை ஊக்குவிக்கிறார் என்று ஊர் மக்கள் நினைக்க மாட்டார்களா என்று ஏன் தோன்றவில்லை? எது சரி என்று எனக்கு தெரியவில்லை’ என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இயக்குனர்கள் காலித் ரஹ்மான், அஷ்ரப் ஹம்ஸா ஆகியோர், ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிர் வீட்டில் கஞ்சாவுடன் பிடிபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
