×

மாவட்ட செயலாளர் போச்சு… எம்எல்ஏ சீட்டாச்சும் கொடுங்க… விஜய் காரை மறித்த அஜிதா ‘அடுத்த சர்ச்சை’: தவெக ஆபிசுக்கு சென்ற போலி லெட்டர்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அஜிதா ஆக்னல். தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட பொறுப்பாளர் என கூறி வந்தார். ஆனால் மாவட்ட செயலாளர் நியமனம் தாமதமாகி வந்தது. இந்நிலையில் சாமுவேல்ராஜ் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார். தனக்கு கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி காரணமாக, அஜிதா ஆக்னல் தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு சென்று விஜய்யின் காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

விஜய் அவரை பொருட்படுத்தாததால், தூத்துக்குடி திரும்பிய அஜிதா ஆக்னல் கடந்த டிச.25ம் தேதி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சில நாட்கள் சிகிச்சைக்கு பின், தற்போது மீண்டும் கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக பல்வேறு சமூக நலப்பணிகளை அஜிதா ஆக்னல் தொடர்ந்து செய்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அஜிதா ஆக்னல் விருப்ப மனு அளித்துள்ளார்.

மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறார். இதனிடையே வரும் தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அஜிதா ஆக்னலை பரிசீலிக்க வேண்டுமென முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்கம் சார்பில் ஒரு கடிதம், சென்னை பனையூர் தவெக அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து தூத்துக்குடி தொகுதியில் நகர்ப்புறம், கிராமப்புறம், மீனவர் குடியிருப்புகள் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்சியின் கொள்கைகளை கொண்டு சேர்த்தல், உறுப்பினர் சேர்க்கை, சமூகநலப் பணிகள், நிவாரண நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் அஜிதா ஆக்னல் முக்கிய பங்காற்றி உள்ளார்.

அவர் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சாதி- மத வேறுபாடின்றி ஆதரவை பெற்றுள்ளார். மக்கள் பிரச்னைகளை நேரில் கேட்டு, உடனடி தீர்வு முயற்சிகளில் ஈடுபடுகிறார். எனவே தூத்துக்குடி தொகுதியின் வெற்றி வேட்பாளராக இருப்பார். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த கடிதத்திற்கும் முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்கத்தினருக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் கனகராஜ், பொதுச் செயலாளர் ராஜி, பொருளாளர் மிக்கேல் ஆகியோர் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், “சங்கத்தின் லெட்டர் பேடு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் எந்தக் கடிதமும் யாருக்கும் அனுப்பவில்லை. இது முறைகேடு மற்றும் சட்டவிரோத செயல். சங்கத்தை இழிவுப்படுத்தும் விதமாகவும், ஏமாற்றும் நோக்கத்துடனும் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. வருகிற 21ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற உள்ள பரதர் குல மாநாட்டை சிதைக்கும் நோக்கத்துடன் இந்தக் கடிதம் தயாரிக்கப்பட்டு இருக்கலாம். போலி கடிதத்தை தயாரித்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்து உள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டு உள்ளனர். இந்த விவகாரம் தற்போது தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜிதா ஆக்னலே தனது செல்வாக்கை பயன்படுத்தி முத்துக்குளித்துறை பரதர் நலச் சங்க லெட்டர் பேடில் ஆதரவாளர்களை வைத்து விஜய்க்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார் என்ற சந்தேகம் தவெகவினர் மற்றும் மீனவர் சமுதாயத்தினர் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் அஜிதா ஆக்னல் என்றாலே பரபரப்பும், சர்ச்சையும் தானா? என தவெகவினர் அங்கலாய்க்கின்றனர்.

Tags : district secretary ,MLA ,Ajitha ,Vijay ,Thaveka ,Ajitha Agnal ,Thoothukudi district ,Thoothukudi central district ,Tamil Nadu Victory Party ,Samuelraj ,
× RELATED சொல்லிட்டாங்க…