- இபிஎஸ்
- விஜய்
- செங்ஸ்
- சத்தியமங்கலம்
- பவானி சாகர்
- ஈரோடு மாவட்டம்
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் பகுதியில் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘‘எங்கள் ஆட்சியில் என்ன தவறு சுட்டிக்காட்டுங்கள் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். அவ்வாறு கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அதிமுக பாஜவின் அடிமை. எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்று பதவி வாங்கினார் எனக் கூறுவதை தவிர்க்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி என்பது வலுவான கூட்டணி. பிரதமர் மோடி தமிழகத்திற்கு நேரில் வந்து கூட்டணி கட்சி தலைவர் உடன் மேடையில் தோன்றி சிறப்பாக பிரசாரத்தை துவக்கி வைத்தார்’’ என்றார். இதுதவிர முழுக்க முழுக்க திமுக அரசை பற்றி மட்டுமே பேசினார்.
சேலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய விஜய் அதிமுகவை கடுமையாக சாடிய நிலையில், அதன் பிறகு நடைபெற்ற அதிமுகவின் பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி விஜய்யை கடுமையாக தாக்கி பேசுவார் என எதிர்பார்த்து காத்திருந்த தொண்டர்கள் மத்தியில் அவர் அதைப்பற்றி வாயே திறக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தபோது ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த நிலையில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியும் அவரது கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் தவெகவில் இணைந்ததால் அவரைப் பற்றியும் கடுமையாக தாக்கிப் பேசுவார் என எதிர்பார்த்த நிலையில் செங்கோட்டையனை பற்றியும் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை. இதனால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கூட்டம் ஏற்பாடு செய்த இடம் 3.5 ஏக்கர் பரப்பளவில் இருந்த நிலையில் சிவராத்திரி தினம் என்பதால் எதிர்பார்த்த அளவிற்கு தொண்டர்கள் வராததால் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற இடத்தின் ஒரு பகுதி தொண்டர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
