புதுடெல்லி: நாடாளுமன்ற வளாகத்துக்கு நாய் கொண்டு வந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரிக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2025 டிசம்பர் 1ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி, காரில் ஒரு நாயை எடுத்து வந்தார். இதற்கு பாஜ எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது, “நாடாளுமன்றத்துக்கு வரும் வழியில் ஒரு விபத்து நடந்த இடத்தில் நாய் குட்டியை பார்த்தேன். அது அடிப்பட்டு விடுமோ என பயந்து அதை இங்கே எடுத்து வந்தேன். நாடாளுமன்ற வளாகத்துக்கு நாயை கொண்டு வந்ததில் என்ன மரபு பாதிக்கப்பட்டது. இவ்வாறு நாயை கொண்டு வரக்கூடாது என ஏதாவது சட்டம் இருக்கிறதா? கடிப்பவர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே அமர்ந்துள்ளனர். ஆனால் நாய்கள் அவர்களை கடிக்காது” என பேசியது சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தியது. ரேணுகா சவுத்ரியின் பேச்சு இரு அவைகளிலும் உள்ளவர்களின் மரியாதையை இழிவுப்படுத்துவதாக பாஜ எம்பிக்கள் குற்றம்சாட்டினர்.
இந்த விவகாரத்தில் தற்போது காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரிக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வரும் 23ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ரேணுகா சவுத்ரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
