×

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பாலியல் குற்றவாளியிடம் விருது பெற்ற கபில் சிபல்: ராகுல் காந்திக்கு பாஜக தலைவர்கள் கேள்வி

புதுடெல்லி: அமெரிக்க பாலியல் குற்றவாளிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள தொடர்பு குறித்து பாஜக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அமெரிக்காவில் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச விருது வழங்கும் விழாவில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒன்றிய அரசில் அமைச்சராக இருந்த கபில் சிபல் கலந்து கொண்டார்.

இந்த விழாவிற்கு ஜெப்ரி எப்ஸ்டீன் நிதி வழங்கியதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி மற்றும் ஷெஷாத் பூனவல்லா ஆகியோர் சமூக வலைதளத்தில் ஆதாரங்களை வெளியிட்டு எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டுள்ளனர். நேற்று பாஜக முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகளை கபில் சிபல் முற்றிலுமாக மறுத்துள்ளார். தற்போது மாநிலங்களவை சுயேச்சை உறுப்பினராக இருக்கும் அவர், பாஜகவின் இந்த ஆதாரமற்ற புகார்கள் ‘அர்த்தமற்றவை மற்றும் குப்பை’ எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கெரா இது குறித்து கூறுகையில், ‘கல்வித் துறையில் உலகளாவிய ஒத்துழைப்பை உறுதி செய்ததற்காகவே கபில் சிபல் அந்த விழாவில் கவுவிக்கப்பட்டார்’ என விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் பாஜக காட்டிய 59 பக்க ஆவணமானது எப்ஸ்டீன் கண்காணிக்க விரும்பிய பொது நிகழ்ச்சிகளின் தொகுப்பு மட்டுமே என்றும், இதில் ஒன்றிய அமைச்சர் ஒருவரின் பெயரும் உள்ளதாகக் கூறி காங்கிரஸ் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Tags : Kapil Sibal ,UPA ,BJP ,Rahul Gandhi ,New Delhi ,Congress party ,Jeffrey Epstein ,United States ,
× RELATED புதுச்சேரியில் கூட்டணி தொடர முதல்வர்...