தமிழக அரசியலில் எலியும் பூனையுமாக இருந்த அதிமுகவும் அமமுகவும் திடீரென ேதஜ கூட்டணியில் இணைந்தனர். ஆனால், டிடிவி தினகரன், எடப்பாடி இருவர் மட்டுமே பங்காளி சண்டை முடிவுக்கு வந்ததாக கூறினார்களே தவிர, இரு கட்சி தொண்டர்களும் இணைந்ததாகவே தெரியவில்லை. பல தொகுதிகளில் முட்டலும் மோதலும் தொடங்கிவிட்டது. இது சில தினங்களுக்கு முன்பு அதிமுக நடத்திய ஆர்ப்பாட்டங்களில் எதிரொலித்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாஜி அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணி ஏற்பாடு செய்து பாஜ உட்பட கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அமமுகவுக்கு அழைப்பே இல்லை. இதனால் அவர்கள் யாரும் போகவில்லை.
இதுபற்றி விசாரித்தபோது அதிமுக கூட்டணியில திருப்பத்தூர், வந்தவாசி, சோளிங்கர் ஆகிய 3 தொகுதிகளை கேட்டு எடப்பாடிக்கு, குக்கர் கொடுத்த பிரஷர் தான் காரணமாம். இவர்களின் அழுத்தத்தால் திருப்பத்தூர் தொகுதி அமுமுக ஞானசேகருக்கு போய் விடுமோ என்ற அச்சத்தில் ேக.வி.வீரமணி திருப்பத்தூரில் எந்த தொகுதியையும் அமமுகவுக்கு விட்டுக்ெகாடுக்க முடியாதுன்னு அடம்பிடிக்கிறாராம். அதனால தான் போராட்டத்துக்கு அமமுகவுக்கு அழைப்பு விடுக்கவில்லையாம். ஏன் எங்களுக்கு அழைப்பு இல்லைன்னு அமமுக நிர்வாகிங்க கேட்டபோது, ‘எனக்கு யாரை பிடிக்குமோ அவங்களைத்தான் அழைப்பேன்னு’ அலட்சியமா பதில் சொல்லிட்டாராம். இதனால எலக்ஷன் நேரத்தில நாங்க பார்த்துக்கிறோம்னு அவங்க குமுறலை வெளிப்படுத்துறாங்களாம்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மூலம் ஸ்டார் அந்தஸ்தை பெற்ற தொகுதியாக உள்ளது. தற்போது அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் மா.சேகர், முன்பு அமமுகவில் பயணித்தவர். அந்த கட்சியில் பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்ற ஒரே நபர் இவர். பின்னர் டிடிவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் எடப்பாடியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். ஆனால் அவருடன் பலரும் விலகாமல் அமமுகவிலேயே இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஒரத்தநாட்டில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் அமமுகவினருக்கு முறையான அழைப்பு விடுக்காததால் அவர்கள் அடியோடு புறக்கணித்து விட்டனர். ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட சீட்டு வாங்கும் ரேசில் முன்னணியில் இருக்கும் மா.சேகர் இதனால் கடும் அப்செட் ஆகியுள்ளாராம்.
மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தேர்தல் வாக்குறுதி துண்டுபிரசுரம் விநியோகிக்கும் பணியில் அதிமுகவினர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். பெயரளவுக்கு கூட கூட்டணி கட்சிகளை கண்டுகொள்வதில்லை. குறிப்பாக செல்லூர் ராஜூ, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் போன்றோர் கோஷ்டி பூசலில் தங்கள் கட்சியினரைக் கூட முறையாக அழைத்து செல்வதில்லை. இதனால், கூட்டணி இருப்பதையே மறந்து விட்டதைப் போல தனியாக அவர்கள் மட்டும் பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக செல்லூர் ராஜூ மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் ஒவ்வொரு ரேஷன்கார்டு உள்ள குடும்பத்திற்கும் ஹாட் பாக்ஸ் கொடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து துண்டு பிரசுரம் விநியோகிக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிகளில் அதிமுகவினர் மட்டுமே பங்கேற்கின்றனர். பெயரளவிற்கு கூட கூட்டணி கட்சியினரை அழைப்பதில்லை. அவர்களும் இதை கண்டு கொள்வதில்லை. பாஜ மற்றும் அமமுகவின் முக்கிய நிர்வாகிகள், தமாகாவில் முன்னாள் எம்எல்ஏக்கள் மதுரையில் இருந்தாலும் இவர்களைக் கூட அதிமுகவினர் கண்டுகொள்வதில்லையாம். இதனால், ‘தனியே…. தன்னந்தனியே’ என்பதை போல, அதிமுகவினர் தனியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அதிமுக தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் உள்ள கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
