×

அசாமில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்: கவுரவ் கோகாய் உறுதி

 

அசாம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் விறுவிறுப்பு கூடி விட்டது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே காங்கிரஸ் 2 கட்ட பட்டியலை வெளியிட்டு விட்டது. முதல் பட்டியலில் 42 பேரும், இரண்டாவது பட்டியலில் 23 பேரும் இடம் பிடித்து உள்ளனர். இதில் எல்லாமே புதுமுகம். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பூபன்போரா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஏற்கனவே காங்கிரசில் இருந்து வெளியேறி பா.ஜவில் இணைந்த நிலையில் வேட்பாளர் பட்டியல் இளைஞர்களுக்கும், புதுமுகத்திற்கும் ஆதரவாக இருப்பதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் கூறியதாவது: வேட்பாளர் பட்டியலில் அதிருப்தியால் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதாக வருவது வதந்தி. எந்தவொரு மூத்த காங்கிரஸ் தலைவரிடமிருந்தும் எங்களுக்கு ராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை. அசாமின் பரந்த நலனுக்காக, அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். காங்கிரசுக்குள் எந்த கிளர்ச்சியும் இல்லை. உண்மையில், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னரே மக்களிடையே உற்சாகம் அதிகரித்துள்ளது.

இறுதிப் பட்டியல் குறித்து கட்சிக்குள் இன்னும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த முறை அசாமில் பா.ஜ ஆட்சி வீழ்த்தப்படும். காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. வேட்பாளர் அறிவிப்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வந்தாலும், அசாம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. எனவே எந்த பயமும், பதற்றமும் இல்லை. காங்கிரஸ் கூட்டாக முன்னேறும். விரைவில் இறுதி பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Congress ,Assam ,Kaur Kogai ,
× RELATED மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி...