×

10 சீட் கொடுங்க இல்லன்னா 51 தொகுதியில தனித்து போட்டி: பாஜவுக்கு ஒன்றிய அமைச்சர் ‘செக்’

இந்திய குடியரசுக் கட்சி தலைவரும், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை ஒன்றிய இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நேற்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சில மாதங்களில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான, சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்திய குடியரசுக் கட்சி சார்பில் தமிழகத்தில் போட்டியிட, தேசிய ஜனநாயககூட்டணியில் 10 தொகுதிகள் கேட்டுள்ளோம். தொகுதிகள் வழங்கப்படவில்லை எனில், தலித் வாக்குகள் அதிகமுள்ள 51 தொகுதிகளில் சுயேட்சையாக போட்டியிட உள்ளோம். மீதமுள்ள தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிப்போம். இந்திய தேர்தல் ஆணையம் சார்பில், தமிழகத்தில் போட்டியிட எங்களுக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் இச்சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எனவே, தற்போது கரும்பு விவசாயி சின்னத்தை நீள நிறத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளோம். தமிழக மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், விஜய் கட்சி துவங்கி இருந்தால், அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

* யார் யாரோ சீட் கேட்குறாங்க… இபிஎஸ்சுக்கு வந்த சோதனை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் முகாமிட்டுள்ளார். நேற்று முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, சம்பத் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை தனித்தனியாக சந்தித்து பேசினர். இதேபோல், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் நிறுவன தலைவர் சங்கிலி தலைமையிலான நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்தனர். பின்னர் தலைவர் சங்கிலி கூறுகையில், எங்களது கட்சி மிகவும் வலிமையாக செயல்பட்டு வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் வழங்கி உள்ளோம். தேர்தலில் உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, போடி, ஆத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளை எங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு கேட்டுள்ளோம் என்றார். இதை பார்த்த அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள், எப்படி இருந்த கட்சி இப்படி ஆகிவிட்டது. யார் யாரோ வந்து சீட் கேட்குறாங்க… இதென்னடா இபிஎஸ்சுக்கு வந்த சோதனை என புலம்பி வருகின்றனர்.

Tags : Union Minister ,BJP ,Republican Party ,India ,Union Minister of State for Social Justice and Empowerment ,Ramdas Athawale ,Chennai ,Tamil Nadu ,
× RELATED நெருக்கடி தேவையற்றது: சீமான் பேட்டி