சென்னை: திருச்சி வந்த அமித்ஷாவை வரவேற்க வராமல் அண்ணாமலை புறக்கணித்தார். பதவி தராததால் தொடர்ந்து மேலிடத்துடன் மோதல் போக்கை அவர் கடைபிடித்து வருவது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சரும் பாஜ மூத்த தலைவருமான அமித்ஷா, நேற்று முன்தினம் 11.05 மணிக்கு டெல்லியில் இருந்து திருச்சி விமானநிலையம் வந்தார். விமானநிலையத்தில் அவரை தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். பின்னர் இரவு 12 மணிக்கு திருச்சியில் உள்ள ஓட்டலில் தங்கினார். நேற்று காலையில் அவர் புதுவை மாநிலம் காரைக்கால் சென்று பொதுக்கூட்டத்தில் பேசினார். பின்னர் மீண்டும் திருச்சி வந்து மாலை 6 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அப்போதும் அவரை நயினார் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வழியனுப்பி வைத்தனர். ஆனால் உள்துறை அமைச்சரை வரவேற்கவோ, வழியனுப்பவோ முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவில்லை. அமித்ஷா வருகை குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் வேண்டும் என்றே அமித்ஷாவின் வருகையை புறக்கணித்துள்ளார். இது பாஜ வினரிடையே கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து பாஜ மூத்த தலைவர்கள் கூறும்போது, மாநில தலைவர் பதவியை பறித்தது முதல் அவர் கடும் அதிருப்தியில் உள்ளார். அதிமுக, பாஜ கூட்டணியை வர விடாமல் தடுக்க முயன்றார்.
முடியவில்லை. இதனால் இந்த கூட்டணி பல இடங்களில் தோற்க தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் அண்ணாமலையால் கடந்த மக்களவை தேர்தலில் கூட்டணிக்கு அழைத்து வரப்பட்ட அமமுக, பாமக, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கூட்டணிக்குள் கொண்டு வரும் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டது. அதில் பாமகவை அமித்ஷா அழைத்ததால் அவர்கள் வந்தனர். அமமுகவை மட்டும் அவர் அழைத்து வந்தார். இந்நிலையில் தனக்கு தேசிய அளவில் பதவி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் வெளிமாநிலத்தில் எம்பி பதவி கொடுத்து ஒன்றிய அமைச்சராக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவரை பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்தார்.
மாநில பாஜ சார்பில் நடத்தப்படும் கூட்டத்துக்கு அழைத்தும் அவர் வராமல் இருந்தார். பல கூட்டத்துக்கு அவர் வராததால், தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், அவரை அழைத்து சத்தம் போட்டார். இதனால் ஒரு வாரத்துக்கு முன்னர் நடந்த கூட்டத்துக்கு வந்தார். ஆனால் தற்போது அமித்ஷாவை வரவேற்க அவர் வரவில்லை. அதேநேரத்தில் அண்ணாமலை நேற்று சென்னையில் இருந்தார். சென்னையில் கட்சி அலுவலகத்தில் மாநில நிர்வாகிகளுடன் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்துக்கும் அண்ணாமலை வரவில்லை. நேற்று சென்னையில் இருந்தும் கூட்டத்துக்கு வராமல் புறக்கணித்தார். இதனால் அண்ணாமலை மீது புகார் செய்ய நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பாஜவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
