×

100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் கைது: பிரதமர் மோடி படத்தை தீயிட்டு கொளுத்தி கடும் எதிர்ப்பு

சென்னை: ஒன்றிய பாஜ அரசை கண்டித்து, கிண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். பிரதமர் மோடியின் படத்தை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கி, அந்த திட்டத்தையே முடக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது.

அப்போது, சின்னமலையில் உள்ள ராஜிவ் காந்தி சிலை அருகே காங்கிரசார் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், பொருளாளர் ரூபி மனோகரன், எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, துரை சந்திரசேகர், அமைப்பு செயலாளர் ராம்மோகன், காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் தாம்பரம் நாராயணன், மாநில பொதுச் செயலாளர் காண்டீபன், முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்தழகன், செயற்குழு உறுப்பினர் சுமதி அன்பரசு, ஆர்டிஐ பிரிவு மாநில துணை தலைவர் மயிலை தரணி, மாவட்ட தலைவர்கள் கராத்தே செல்வம், எம்எம்டிஏ கோபி, டில்லி பாபு, ஜோதி பொன்னம்பலம், மதராம்மாகனி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய பாஜ அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது பிரதமர் மோடியின் படத்தை தீயிட்டு ெகாளுத்தி காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்கிருந்து கிண்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட காங்கிரசார் முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்பட 300க்கும் மேற்பட்ட காங்கிரசாரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் விடுவித்தனர்.

முன்னதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை ஒன்றிய பாஜ அரசு அகற்றியுள்ளது. மகாத்மா காந்தி பெயர் ஏன் பாஜவுக்கு கசக்கிறது. ஆர்.எஸ்.எஸ் சொல்வதை பாஜ கேட்கிறது. அவர்களின் அரசியல் முகமாக பாஜ இருக்கிறது. இதை தான் நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசி வருகிறார். 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயரை மீண்டும் சேர்க்கும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

ஒன்றிய பாஜ அரசு ஜிஎஸ்டி நிதியைச் சரியான முறையில் மாநிலங்களுக்கு வழங்குவதில்லை. பேரிடர் காலங்களில் உரிய நிதி அளிப்பதில்லை. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் மாநில அரசுகள் 40 சதவீத நிதி அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை மூலம் பாஜ ஆளாத மாநிலங்களை பழிவாங்க ஒன்றிய அரசு முயல்கிறது. விஜய்யை நடிகை திரிஷா உடன் நயினார் நாகேந்திரன் இணைத்து பேசியிருக்கிறார். நயினார் நாகேந்திரன் ஒரு பண்பாளர், அவர் அப்படி பேசி நான் பார்த்ததில்லை. அவ்வாறு பேசி இருப்பதை அவர் தவிர்த்து இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Governor's House ,Gandhi ,PM Modi ,Chennai ,Guindy Governor's House ,Union BJP government ,Modi ,
× RELATED நடிகை ஸ்ரீதேவியின் சொத்து தொடர்பான...