புதுடெல்லி: பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் குறித்து ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய கடந்த 2013ம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தவும், புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் ‘ஷீ-பாக்ஸ்’ (SHe-Box) என்ற இணையதளத்தை ஒன்றிய அரசு கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி புதிய வடிவில் மேம்படுத்தித் தொடங்கியது. இந்த இணையதளத்தில் பெறப்படும் புகார்கள் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாவித்திரி தாக்கூர் விரிவான விளக்கத்தை அளித்தார்.
அமைச்சர் தனது பதிலில், ‘புதிய இணையதளம் தொடங்கப்பட்டது முதல் கடந்த பிப்ரவரி 6ம் தேதி வரை மொத்தம் 296 புகார்கள் வரப்பெற்றுள்ளன. இதில் கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் 254 பெண் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் அளித்துள்ளனர். நடப்பு ஆண்டில் பிப்ரவரி 6ம் தேதி வரை 21 புகார்கள் பதிவாகியுள்ளன. இதுவரை பெறப்பட்ட மொத்தப் புகார்களில் 105 புகார்கள் மீது முழுமையான விசாரணை நடத்தித் தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 777 மாவட்டங்களில் உள்ளூர் குழுக்களின் விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. மேலும் சுமார் 92,400 அரசு நிறுவனங்கள் மற்றும் 56,300 தனியார் நிறுவனங்கள் என மொத்தம் 1,48,700 மேற்பட்ட பணியிடங்கள் இந்த இணையதளத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. புகார்கள் மீது 90 நாட்களுக்குள் தீர்வு காண்பதை உறுதி செய்ய தானியங்கி அறிவிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு செல்போன் மற்றும் மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டுத் தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்றார்.
