சென்னை: இந்தியப் பெருங்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் வறண்ட வானிலை நிலவிய நிலையில், 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக தஞ்சாவூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறைந்து காணப்பட்டது.
ஈரோடு, மதுரை, திருவள்ளூர் மாவட்டங்களில் மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப்பெருங்கடலின் கிழக்குப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இந்நிலையில் இந்தியப் பெருங்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் குளிர்கால பருவமழை இயல்பை விட 87% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் குளிர்கால பருவமழை இயல்பை விட 114 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
