பிப்ரவரி 14 என்றாலே இளசுகளின் நெஞ்சில் மட்டும் பட்டாம்பூச்சிகள் பறப்பதில்லை; காதலை கடந்து வந்த முதியவர்களின் கண்களிலும் ஒரு மெல்லிய மின்னல் தோன்றும். ‘காதல்’ என்ற மூன்றெழுத்து மந்திரம், காலங்களை கடந்தும் கசக்காத ஒரே சுவை. நாம் இன்று ரோஜாக்களுடனும், பரிசுகளுடனும் கொண்டாடும் இந்த காதலர் தினத்திற்கு பின்னால் ஒரு நெஞ்சை உலுக்கும் தியாக வரலாறு இருக்கிறது. கி.பி. 3ம் நூற்றாண்டில், ரோமானிய பேரரசர் இரண்டாம் கிளாடியஸ், சிப்பாய்கள் திருமணம் செய்து கொண்டால் வீரமும் அர்ப்பணிப்பும் குறைந்துவிடும் என்று கருதி திருமணங்களுக்கு தடை விதித்தார். ஆனால், புனித வாலண்டைன் என்ற பாதிரியார், அரசரின் கட்டளையை மீறி ரகசியமாக காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.
இறுதியில் பிடிபட்ட அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் இருந்த போது, சிறை காவலரின் பார்வையற்ற மகள் அஸ்டோரியஸுடன் அவருக்கு காதல் அரும்பியது. அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன் தன் காதலிக்கு எழுதிய கடிதத்தில், உன்னுடைய வாலண்டைனிடமிருந்து என்று கையெழுத்திட்டார். அவர் கொல்லப்பட்ட அந்த தினமே இன்றும் உலகெங்கும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. காலங்கள் மாறினாலும் காதல் மாறும் விதம் சுவாரஸ்யமானது. 80களிலும் 90களிலும் கண்ணாடி வளையல்களும், கொலுசுகளும், கைகளால் எழுதப்பட்ட காதல் கடிதங்களுமே காதலின் உச்சபட்ச அடையாளங்களாக இருந்தன. ‘உன் உயிரை அனுப்பினேன், அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்’ என ரசம் சொட்டச் சொட்ட கடிதங்கள் பரிமாறப்பட்டன.
இன்று அவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களாகவும், ஐபோன் பரிசுகளாகவும் மாறியிருக்கலாம். ஆனால், அதிலிருக்கும் அன்பு மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது. காதல் என்பது வெறும் ஆடம்பரமான பரிசுகளில் மட்டும் இல்லை. ‘நான் உனக்காக இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையை தருவதே காதலின் மிகச் சிறந்த மருந்து. கணவன் – மனைவி, நண்பர்கள் என எந்த உறவாக இருந்தாலும், ஒரு சிறிய பூவை கொடுத்து சொல்லும் ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையில் மலரும் வாசம் எதற்கும் ஈடாகாது. ‘உறவாக யாரும் வேண்டாம்… உயிராக நீ மட்டும் போதும்,’ ‘நீ தூங்குவதற்கு சிறந்த இடம் என் இதயம் என்றால், உனக்காக என் இதயத் துடிப்பையும் நிறுத்தி வைப்பேன் நீ விழிக்கும் வரை’ இந்த காதலர் தினத்தில், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு விலை உயர்ந்த பரிசுகளை விட, உங்கள் நேரத்தையும், உண்மையான அன்பையும் பரிசாகத் தாருங்கள். ஏனெனில், அன்பைப் பகிர்வதற்கு ஒரு நாள் போதாது, ஆயுள் முழுவதுமே தினமும் காதலர் தினம்தான்!
ஏ.ஐ காலத்தில் காதல் என்பது ஒரு ‘அல்காரிதம்’ போல மாறிவிட்டது. சங்க காலத்தில் தலைவன் தலைவியைத் தேடி காடு மேடெல்லாம் அலைந்தான். இன்று ‘ஸ்வைப்’ செய்தால் போதும், இதயம் கைகளில் வந்து விழுகிறது. முன்பெல்லாம் பேருந்து நிறுத்தத்திலும், நூலகத்திலும் நிகழ்ந்த தற்செயலான சந்திப்புகள் இப்போது குறைந்து விட்டன. ஏஐ தொழில்நுட்பம் உங்கள் விருப்பு வெறுப்புகளை ஆராய்ந்து, ‘உங்களுக்கு பொருத்தமானவர் இவர்தான்’ என்று ஒரு பட்டியலை நீட்டுகிறது. டேட்டிங் ஆப் மூலம் காதலை தேர்ந்தெடுக்கும் ‘மெனு கார்டு’ கலாசாரம் வந்து விட்டது. காதலிக்கு கடிதம் எழுத கவிஞர்களிடம் கெஞ்சிய காலம் போய், இப்போது ஒரு சில ‘கீவேர்டுகளை’ கொடுத்தால், சாட்ஜிபிடி ரசம் சொட்டச் சொட்ட கவிதைகளை நிமிடங்களில் தயார் செய்து விடுகிறது.
இதனால் காதலில் மொழிப் புலமையை விட, தொழில்நுட்ப புலமையே மேலோங்கி நிற்கிறது. நிஜ மனிதர்களிடம் பேசுவதை விட, எமோஷனல் ஆக புரிந்துகொள்ளும் ஏஐ சாட்பாட்-உடன் காதல் வயப்படும் விசித்திரமான காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். அவை கோபப்படுவதில்லை, எந்நேரமும் நமக்காகவே காத்திருக்கின்றன. ஆனால், மனித ஸ்பரிசமும் உண்மையான உணர்வுகளும் அங்கு மிஸ்ஸிங். தொலைதூரத்தில் இருக்கும் காதலர்கள் இப்போது போனில் மட்டும் பேசுவதில்லை. மெட்டாவர்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம், வெவ்வேறு நாடுகளில் இருந்தாலும் ஒரே கடற்கரையில் அமர்ந்து பேசுவது போன்ற உணர்வை ஏஐ நமக்குத் தருகிறது.
ஏஐ காலத்தில் காதல் எளிதாக கிடைக்கிறது. ஆனால் அது எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதுதான் கேள்வி. அல்காரிதம் காட்டிய நபரை விட, அனுபவம் காட்டும் நபரே நீண்ட காலத் துணையாக இருக்க முடியும். டெக்னாலஜி காதலை தேடித் தரலாம். ஆனால் அந்த காதலை காப்பாற்ற வேண்டியது மனித மனங்கள் தான். இதயத் துடிப்பை அல்காரிதம்களால் அளவிட முடியுமே தவிர, உணர முடியாது. முன்பெல்லாம் காதலைச் சொல்ல ஒரு வருடம் காத்திருந்தார்கள். பிறகு ஒரு மாதம் ஆனது. இப்போது ஒரு நிமிடத்தில் ‘மேட்ச்’ ஆகிவிடுகிறது. வானத்தில் பறந்து வந்து அம்பு எய்த ‘மன்மதன்’ இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்குப் பதில் ‘அல்காரிதம்’ என்ற டிஜிட்டல் தேவதூதன் நம் காதலைத் தீர்மானிக்கிறான்.
ஒரு காலத்தில் ஜாதக கட்டங்களை வைத்து பொருத்தம் பார்த்தார்கள். இன்று உங்கள் ‘பிரவுசிங் ஹிஸ்டரி’ வைத்து ஏஐ பொருத்தம் பார்க்கிறது. உங்களுக்குப் பிடித்த உணவு, நீங்கள் ரசிக்கும் சினிமா, உங்கள் அரசியல் பார்வை என எல்லாவற்றையும் டேட்டாவாகச் சேமித்து வைத்து, ‘உங்களுக்கேற்ற ஜோடி இதோ’ என மொபைல் திரையில் காட்டுகிறது தொழில்நுட்பம். முன்பு காதலிக்கு ஒரு கடிதம் எழுதினால், அதில் கண்ணீர்த் துளிகளும், கறை படிந்த மைத் தடங்களும் இருக்கும். இன்று ‘ரொமாண்டிக் ஆக ஒரு மெசேஜ் போடு’ என்று ஏஐ-யிடம் கேட்டால், அது கம்பன் வீட்டுப் பிள்ளையாக மாறி கவிதை பொழிகிறது. ஆனால் அந்த வார்த்தைகளில் ‘டேட்டா’ இருக்கிறதே தவிர, நிஜமான ‘தேடல்’ இருப்பதில்லை என்பது தான் நிதர்சனம்.
கடற்கரை மணலில் பெயர் எழுதுவது பழைய ஸ்டைல். இப்போது காதலர்கள் ‘மெட்டாவர்ஸ்’ உலகிற்குள் நுழைந்து விர்ச்சுவல் பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்கிறார்கள். முகம் பார்க்காமல், தொடுதல் இல்லாமல், வெறும் பிக்சல்களால் பிணைக்கப்பட்ட இந்தக் காதல், காலத்தின் விசித்திரம். ஏஐ காலத்துக் காதலில் வேகம் இருக்கிறது, ஆனால் விவேகம் இருக்கிறதா, முகம் தெரியாத ஒருவருடன் டேட்டாக்களின் அடிப்படையில் காதல் வயப்படுவது எவ்வளவு சுவாரஸ்யமோ, அவ்வளவு ஆபத்தானது. திரைக்குப் பின்னால் இருப்பது தேவதையா அல்லது போலியான புரோபைலா என்பதை ஏஐ-யை விட உங்கள் உள்மனமே கண்டறிய முடியும்.
தொழில்நுட்பம் காதலை எளிதாக்கலாம், ஆனால் அதை அழகாக்க முடியாது. ஒரு ரோபோவிடம் காதலை பகிர்வதை விட, உங்கள் துணையின் கண்களை பார்த்து ஒரு நிமிடம் மவுனமாக செலவழிப்பதே ஆகச்சிறந்த காதல்தினம். டேட்டாக்கள் பொய் சொல்லலாம், ஆனால் இதயம் பொய் சொல்லாது.
