×

தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9801 பேருக்கு பணிநியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளை நனவாக்கும் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக இன்று சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் விழாவில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9801 பேருக்கு பணி நியமன ஆணைகள முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

தொடர்ந்து, சென்னை செனாய் நகரில் 62 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 500 தேர்வர்கள் தங்கிப் பயிலக் கூடிய வகையில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மைய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, “எளிமை ஆளுமை” முன்முயற்சியின் முதல் கட்டமாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 முக்கிய சேவைகள் நெறிப்படுத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது மேலும் கூடுதலாக எளிமைப்படுத்தப்பட்ட 50 சேவைகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசினால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது, நுழைவுச் சீட்டு, பாடத்திட்டங்கள் பதிவிறக்கம், மாதிரி வினாத்தாள்கள் என அனைத்து விதமான நடைமுறைகளையும் கைபேசியிலேயே எளிதாகக் கையாளும் விதமாக “தேர்வுக்களம்” என்னும் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதில் ஒன்றிய அரசின் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின் விவரங்களையும் ஒரே இடத்தில் பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு, தரவு பகுப்பாய்வு, திட்டமேலாண்மை, தொடர்பாடல் உள்ளிட்ட திறன்களை மேம்படுத்திக் கொள்ள கட்டணமின்றி பயின்றிட பயிற்சிகள் வழங்கும் இணைய தளத்தை தொடங்கி வைத்து, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் அத்தியாவசிய பணியாளர்களுக்கு அக்கல்லூரியின் வளாகத்திலேயே 3 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று அடுக்ககத்தில் 8 குடியிருப்புகள் கொண்ட கட்டிடத்தையும் முதவ்வர் திறந்து வைக்கிறார்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu Public Service Commission ,Medical Staff Selection Board ,Teachers Selection Board ,Nehru Indoor Stadium, Chennai ,
× RELATED கிழக்கு கடற்கரை சாலையோரம் குப்பைகளை எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி