சின்னசேலம், பிப். 13: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் கோமுகி அணையில் இருந்து கோமுகி ஆற்று பாசனத்தின்மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலமும், புதிய பாசன கால்வாயின்மூலம் 5000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. மேலும் புதிய பாசன கால்வாய்மூலம் 7 கிராமங்கள், பழைய பாசன கோமுகி ஆறுமூலம் 33 கிராமங்கள் என 40 கிராம விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோமுகி அணை நிரம்பிய நிலையில் பாசன விவசாயிகளின் நலன்கருதி கோமுகி அணை திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்ட 15 நாட்களுக்கு, வினாடிக்கு 60 கனஅடியும், புதிய பாசன கால்வாயில் வினாடிக்கு 50 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதேபோல அடுத்த 14 நாட்களுக்கு வினாடிக்கு 120 கனஅடியும், புதிய பாசன கால்வாயில் வினாடிக்கு 100 கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டது. மேலும் நீர்வரத்திற்கேற்ப பிப்ரவரி மாதம் முழுவதும் தண்ணீர் பாசனத்திற்கு வழங்கப்படலாம் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழையும் போதிய அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெய்யவில்லை. இதனால் கோமுகி அணைக்கு வரும் நீர்வரத்து நின்றுபோனது. இருப்பினும் அணையில் சேமித்து வைக்கப்பட்ட நீரை விவசாயிகளின் நலன்கருதி பிப்ரவரி முதல் வாரம்வரை திறக்கப்பட்டது. இந்த நிலையில் கோமுகி அணையின் நீர்மட்டம் 20 அடியாக குறைந்து போனது. இதனால் கோமுகி அணை வறண்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் மீன் வளர்ப்பிற்கு தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரும் வற்றி அணை வறண்டு போகலாம் என்ற நிலை உள்ளது. இதனால் அறுவடை செய்யாத ஒருசில விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
