×

ஓராண்டு வரக்கூடாது என்ற தடையை மீறி சென்னைக்குள் நுழைந்த ரவுடி கைது: போலீஸ் அதிரடியால் சிறையில் அடைப்பு

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அருணின் வெளியேற்ற உத்தரவை மீறி சென்னைக்குள் நுழைந்த குற்றவாளியான ரவுடியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதாயக் கொலை, பழிவாங்கும் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் மற்றும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மேல் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் நுழைந்து பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீண்டும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் இதுபோன்று கொடுஞ்செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன், பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் அச்சுறுத்தல் தரக்கூடிய மற்றும் தங்களுக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சாட்சிகளை மிரட்டக்கூடிய வரலாற்று பதிவேடு குற்றவாளியை கண்டறியப்பட்ட ரவுடிகளை கைது செய்திருந்தார்.

அவர்களில் பலர் மீது போதைப் பொருள் வழக்கும் நிலுவையில் உள்ளது. இதனால், அவர்கள் சென்னை நகருக்குள் ஓராண்டு நுழைய தடை விதிக்க வேண்டும் என்று போலீஸ் ஆணையருக்கு பரிந்துரை செய்திருந்தார். அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட பனையூர் அஜய் ரோகன் (36), பனையூரில் வசிக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரவுடி நாகேந்திர சேதுபதி (33), ராமநாதபுரம் மாவட்டம் பிரேம்குமார் (45), மதுரை மாவட்டம், அண்ணாநகர் ராஜா (42), திருவான்மியூர் செல்வபாரதி (26), ஆகிய 5 பேர் மீது 2025 செப்டம்பர் 13ம் தேதி சென்னை நகர காவல் சட்டம் பிரிவு 51ன் படி வெளியேற்றுதல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

மேற்கண்ட நபர்களில் அஜய் ரோகன் என்பவர் 3 வழக்குகளிலும், பரமக்குடி டவுன் காவல் நிலையத்தில் நாகேந்திர சேதுபதி என்பவர் 4 வழக்குகளிலும், பிரேம்குமார் என்பவர் 3 வழக்குகளிலும், இசிஆர் ராஜா என்பவர் 1 குற்ற வழக்கிலும், செல்வபாரதி என்பவர் 2 வழக்குகளிலும் சம்பந்தப்பட்டுள்ளனர். சென்னை போலீஸ் ஆணையரின் உத்தரவின் மூலமாக கடந்த செப்டம்பர் 13ம் தேதி மேற்கண்ட நபர்கள் மற்றும் போக்கிரிகள் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குள் நீதிமன்ற வழக்கு தொடர்பாகவோ அல்லது காவல்துறையினர் விசாரணை தொடர்பாகவோ இல்லாமல் வேறு எந்த ஒரு காரணத்திற்காகவும் நுழைவது ஒரு ஆண்டு காலத்திற்கு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் மேற்படி போக்கிரி உட்பட 5 நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (44) என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையரின் வெளியேற்ற ஆணை உத்தரவை மீறி நேற்று சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் நுழைந்த தகவல் கமிஷனர் அருணுக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் உத்தரவின்பேரில், நுங்கம்பாக்கம் போலீசார் பிரேம்குமாரை கைது செய்தனர். பின்னர் பிரேம்குமார், எழும்பூர், 14வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 25ம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை போலீஸ் ஆணையர் அருணால், சென்னைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு, அந்த உத்தரவை மீறி சென்னைக்குள் நுழைந்ததற்காக ரவுடி ஒருவர் கைது செய்யப்பட்டது இதுதான் முதல் முறை. இந்த சம்பவம் ரவுடிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனரால் சென்னைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு, அந்த உத்தரவை மீறி சென்னைக்குள் நுழைந்ததற்காக ரவுடி ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை.

Tags : Rowdy ,Chennai ,Police Commissioner ,Arun ,Chennai Metropolitan Police ,
× RELATED சிறுமியை வன்கொடுமை செய்த ஊழியருக்கு 10 ஆண்டு சிறை