திருப்பூர்: திருப்பூரில் வாடகை வீட்டில் 5 டன் ரேஷன் அரிசியை பதுக்கியவரை கைது செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, 2 மொபட்டை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க மாவட்டம் முழுவதும் கண்காணித்து கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மங்கலம் ரோடு குளத்துபுதுாரில் வாடகை வீட்டில் ஒரு நபர் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி அதை அவிநாசி மற்றும் புதிய திருப்பூர் பகுதியில் வசிக்கும் வடமாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பதாக தகவல் கிடைத்தது.
இதன் பேரில் நேற்று அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் இருந்த தங்கபால் (42) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் கருவம்பாளையம், பாரப்பாளையம், இடுவம்பாளையம், கோழிபண்ணை மற்றும் குளத்துப்பாளையத்தில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதை மொபட்டில் கடத்தி வந்து வாடகை வீட்டில் பதுக்கி கூடுதல் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி, 1 வேன், 2 மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
