×

ஆட்டோவில் வெங்காய மூட்டைகளில் பதுக்கி 179 கிலோ கஞ்சா கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது

*வாகன சோதனையில் போலீசார் அதிரடி

சித்தூர் : ஆட்டோவில் வெங்காய மூட்டைகளில் பதுக்கி 179 கிலோ கஞ்சா கடத்திய பெண் உட்பட 2 பேரை வாகன சோதனையின்போது போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி எஸ்பி தீரஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

வெங்காய வர்த்தகம் என்ற போர்வையில் கஞ்சா கடத்தி வந்த ஒரு கும்பலை அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி போலீசார் சோதனையின்போது கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 179 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதனப்பள்ளி-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள யர்ரகனிமிட்டா பகுதியில் மதனப்பள்ளி 2வது காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லக்கேஜ் ஆட்டோவை தடுத்து நிறுத்தினர்.

மேலும் ஆட்டோ எண் பதிவு செய்யப்படாத ஆட்டோவில் வெங்காய மூட்டைகள் இருந்தது.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வெங்காய மூட்டையை சோதனை செய்தபோது, அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 179 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.44.65 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆட்டோவில் வந்த பெண் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த நாகராஜா(23) மற்றும் சுகுணா(29) என தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் 4 பேர் தலைமறைவாக உள்ளனர். இளைஞர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் எங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்து எந்தெந்த பகுதியில் விற்பனை செய்கிறார்கள்? இவர்களுக்கு உடந்தையாக யார் யார் செயல்பட்டு வருகிறார்கள்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது போலீசார் பலர் உடன் இருந்தனர்.

Tags : Chittoor ,AP ,Annamaya District ,Madanapalli ,SP Deeraj ,
× RELATED திமிரி அருகே விஏஓ அலுவலகத்தில்...