திருப்பூர்: திருப்பூரின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் அமெரிக்கா ஒரு முக்கிய சந்தையாக இருந்து வரும் நிலையில் இந்தியத் தயாரிப்புகளுக்கு தற்போது சுமார் 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அதே வேளையில் வங்கதேசத் தயாரிப்புகளுக்கு 19 சதவீத வரி விதிக்கப்பட்டாலும், அமெரிக்காவில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பருத்தி, செயற்கை நூழிலைகளில் தயாரிக்கப்படும் துணிகள் வரியின்றி அமெரிக்க சந்தைக்குள் நுழைய ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவற்றின் விலை இந்திய தயாரிப்புகளை விட 15 முதல் 18 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இத்தகைய விலை வித்தியாசம் காரணமாக அமெரிக்காவின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் தங்களின் கொள்முதல் ஆர்டர்களைத் திருப்பூரிலிருந்து வங்கதேசத்திற்கு மாற்றக்கூடும் என்று ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த ஒப்பந்தம் இந்தியப்பருத்தி மற்றும் நூல் விற்பனையிலும் மறைமுகப்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசம் தனது ஜவுளித்தேவைக்காகப் பெருமளவு பருத்தியை இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் பேல் வரை கொள்முதல் செய்தது. தற்போது அமெரிக்கப் பருத்தியைப் பயன்படுத்தினால் மட்டுமே வரிச்சலுகை கிடைக்கும் என்ற நிபந்தனையால் அவர்கள் இந்தியப் பருத்தியைப் புறக்கணித்து அமெரிக்காவை நோக்கி நகர வாய்ப்புள்ளது. இது இந்திய நூற்பாலைகளின் வணிகத்தைக் கடுமையாகப் பாதிப்பதோடு உள்நாட்டு நூல் விலையிலும் நிலையற்ற தன்மையை உருவாக்கக்கூடும். போட்டி சூழலை சமாளிக்க ஒன்றிய அரசு இந்திய ஜவுளித்துறைக்கும் இதே போன்ற வரிச்சலுகைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே தொழில்துறையினரின் கோரிக்கையாக உள்ளது.
