நன்றி குங்குமம் தோழி
பிரசவம், பெண்களுக்கு மறுபிறப்பு என்பார்கள். பிரசவத்திற்கு முன்னும் பின்னும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உணவு விஷயத்தில் பார்த்து பார்த்து சாப்பிட வேண்டும். கருத்தரிப்பு என்பதே அதிசயம் என்றாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் பிடித்ததை எல்லாம் சாப்பிட்டால் அது குழந்தைக்கும் பாதிக்கும் என்பதாலேயே கவனம் தேவை. ஆரோக்கியம் சார்ந்த சத்துகள் நிறைந்த உணவுகளையே கர்ப்ப காலத்திலும் பிரசவ நேரத்திலும் சாப்பிட வேண்டும். அதுதான் குழந்தையின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும் என்று மருத்துவர்களும் அட்வைஸ் செய்கிறார்கள்.
‘குழந்தை பிறப்புக்கு பிறகும் உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது அவசியம் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனை கவனத்தில் கொண்டு ‘அக்ரஹார கிச்சன் ஃபுட்ஸ்’ என்ற பெயரில் ஆரோக்கியமான மற்றும் சத்துக்கள் நிறைந்த உணவினை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் வினிதா வாசுதேவன். ‘‘நான் பிறந்தது வேலூர் மாவட்டம். தோல் தொழிற்சாலையில் அப்பா வேலை பார்த்து வந்தார். அந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் நாங்க சென்னைக்கு குடியேறிவிட்டோம். இங்கு வந்த பிறகு அப்பா, அம்மா சேர்ந்து கேட்டரிங் செய்தாங்க. ஸ்வீட் கடைகளுக்கு முறுக்கு, தட்டை, ரிப்பன் முறுக்கு போன்ற ஸ்நாக்ஸ் மற்றும் ஜாங்கிரி, லட்டு ஸ்வீட்களையும் செய்து தருவாங்க.
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அப்பா திடீரென உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அம்மா கேட்டரிங் பிசினஸை தொடர்ந்தார். அம்மா தனியாளாக இரவு பகல் பார்க்காமல் கடுமையாக உழைத்து கேட்டரிங் தொழிலை செய்து வந்தார். நானும் அம்மாவிற்கு துணையாக இருந்து வந்தேன். என் அண்ணாதான் பொருட்கள் வாங்குவது, கடைகளுக்கு சப்ளை செய்வது போன்ற வேலைகளை பார்த்துக் கொண்டார்.
அம்மா தொழிலில் கவனம் ெசலுத்தியதால், வீட்டில் சின்னச் சின்ன வேலைகளாக காய்கறி நறுக்குவது, அப்பளம் பொரிப்பது போன்ற வேலைகளை எனக்கும் சொல்லிக் கொடுத்தார். நானும் அண்ணனும் அம்மாவின் பிசினஸில் உடன் பயணித்ததால், 1000 பேருக்கு சமைக்க எவ்வளவு பொருள் தேவைப்படும் என்று துல்லியமாக எங்களுக்கு தெரியும். அம்மா இல்லாத போது ஆர்டர்களை நாங்களே பார்த்துக் கொள்வோம். கல்லூரிப் படிப்பு முடிச்சதும் காஞ்சிபுரத்திற்கு திருமணமாகி வந்துவிட்டேன். அம்மாவிடம் கற்றுக் கொண்டதைத்தான் நான் இங்கு ‘அக்ரஹார கிச்சன் ஃபுட்ஸ்’ என்ற பெயரில் மெஸ் ஆரம்பித்தேன். கொரோனா பாதிப்பால் தொடர்ந்து நடத்த முடியவில்லை. கொரோனாவிற்குப் பிறகு நாங்க வாலாஜாபாத்துக்கு குடியேறினோம். இது குடும்பங்கள் வசிக்கும் பகுதி என்பதால், இங்கு மெஸ் சரியாக செயல்படவில்லை.
அவசர உலகத்தில் பெண்களும் வேலைக்குச் செல்வதால், அவர்களுக்கு ஆரோக்கியமான அதே சமயம் இன்ஸ்டன்ட் முறையில் சமைக்கக்கூடிய உணவுகளை கொடுக்க திட்டமிட்டேன். வற்றல், மசாலாப் பொடிகள், இட்லிப் பொடி, ரசப்பொடி, ஊறுகாய் என எண்பதற்கும் மேற்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்தோம். தரம் மற்றும் சுவை நன்றாக இருந்ததால் வாடிக்கையாளர் வட்டம் அதிகமானது’’ என்றவர், இரண்டு பெண்களுடன் ஆரம்பித்த பிசினஸ் இன்று இருபத்தி இரண்டு பெண்களுடன் வளர்ந்து நிற்பதாக பெருமையாக கூறுகிறார். ‘‘பெரியவங்க காரணம் இல்லாம நமக்கு எதுவும் விட்டுட்டுப் போகலை.
வருமானம் இல்லாத காலத்திலும் இருக்கின்ற பொருட்களை வைத்து உணவு தயாரித்து ஆரோக்கியமாக வாழ்ந்திருக்காங்க. நமக்கும் சொல்லிக் கொடுத்திருக்காங்க. நாமதான் இன்றைய மாடர்ன் உலகில் அதை எல்லாம் தொலைத்துவிட்டு நிற்கிறோம். முன்னோர்கள் சொல்லிச் சென்ற பல பாரம்பரிய உணவுகளில் வற்றல் ஒரு ப்ரோபயோட்டிக் உணவு. சரியான முறையில் மாவை அரைத்து புளிக்க வைத்து பின் கஞ்சி போல் காய்ச்சி வற்றலாக வார்ப்பார்கள். அதில் நிறைய உயிர் சத்துகள் உள்ளது. எளிதாக ஜீரணமாகும் உணவு.
மக்களின் தேவை என்ன என்று தெரிந்து கொண்டு உணவுகளை தயாரித்து வருகிறோம். அமெரிக்காவில் உள்ள ஒரு உணவகத்திற்கு எங்களின் பொருட்களை சமையலுக்காகவும் விற்பனைக்காக
வும் சப்ளை செய்கிறோம். பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகே எங்களின் உணவினை அவர்கள் வாங்க முன் வந்தார்கள். வெளிநாடுகளில் நம்ம உணவுப் பொருட்களை விற்பனை செய்ய சில விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதைப் பின்பற்றிதான் நாங்க பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறோம்.
எங்களுக்கு சொந்தமாக பேக்டரி இருப்பதால், அங்கு அனைத்து பொருட்களையும் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறோம். காஞ்சிபுரத்தில் ஒரு கடை உள்ளது. அங்கு எங்களின் அனைத்து தயாரிப்புகளையும் விற்பனைக்காக வைத்திருக்கிறோம். சென்னையில் ஒரு கிளையை திறக்கும் எண்ணம் உள்ளது’’ என்றவர், தங்களின் உணவுப் பொருட்கள் குறித்து விவரித்தார். ‘‘எங்களின் ஹாட் செல்லிங் வடுமாங்காவும், வாழை இலை வடாமும்தான். இலை வடாம் என்பது பிரசவித்தப் பெண்களுக்கான தனித்துவ உணவு. பிரசவித்தப் பிறகு பத்திய சாப்பாடு கொடுப்பது வழக்கம். அந்த சமயத்தில் கடைகளில் கிடைக்கும் உணவுகளுக்கு பதில் பசிக்கும் போது ஸ்நாக்ஸாக இலை வடாமை அடுப்பில் சுட்டுத் தருவாங்க.
இதில் ப்ரோபயோட்டிக் அதிகமுள்ளது. கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் சாப்பிடலாம். வயிற்றுக் கோளாறுகள் ஏற்படாது. வாழை இலையில் எழுதி வேக வைப்பதால் அதிலுள்ள சத்துகளும் கிடைக்கும். ஈஸ்ட் தாய்ப்பால் சுரக்க உதவும். எங்க வீட்டில் யாருக்கு குழந்தை பிறந்தாலும் முதலில் பாட்டி இந்த இலை வடாமைத்தான் செய்து கொடுப்பாங்க. எல்லா பொருட்களும் ஆர்கானிக் முறையில் சுத்தமாக செய்கிறோம். செயற்கை நிறமூட்டிகள் சேர்ப்பதில்லை.
நான் தயாரிக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தும் எங்க வீட்டில் மூன்று தலைமுறையாக செய்து வந்த உணவுகள்தான். அதை மற்றவர்களுக்கு கொடுக்க விரும்பி தான் இந்த பிசினஸை ஆரம்பிச்சேன். என் அப்பா உணவுப் பொருளில் நாம எதாச்சும் சாதிக்கணும் என்று அடிக்கடி சொல்வார். அதை நான் நிஜமாக்கிவிட்டேன். பெண்களாகிய நாம் நமக்கு என்ன செய்ய தெரியுமோ அதையே மூலதனமா வைத்து தொழிலை துவங்கினாலே சக்சஸ் பார்க்க முடியும்’’ என்றார் வினிதா வாசுதேவன்.
செய்தி: கலைச்செல்வி
படங்கள்: பாஸ்கரன்
