×

6 முதல் 90 வயதுள்ளவர்கள் புத்தகம் வெளியிடலாம்!

நன்றி குங்குமம் தோழி

– முனைவர் லக்ஷ்மி ப்ரியா

‘‘எங்க மூலமாக பலர் தங்களின் முதல் புத்தகங்களை அச்சில் பார்த்து மகிழ்ந்துள்ளனர் என்பதுதான் பெரும் சாதனை. குடும்பத் தலைவிகள், குழந்தைகள், வயதானவர்கள், திருநங்கையர்கள் என எழுதுவதில் அதிக ஆர்வம் மற்றும் விருப்பம் இருக்கும். அவர்களுக்கு புத்தகம் எழுதுவது எப்படி என்று தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கு எழுத தேவையான பயிற்சிய ளித்து ஊக்குவித்து புத்தகத்தினை அச்சில் பார்க்க உதவுகிறோம். எழுத ஆர்வமுள்ள அனைவரையுமே எழுத்தாளர்களாக மாற்ற வேண்டும் என்பதே எங்களது ‘pachyderm tales’ நிறுவனத்தின் சிறப்பான நோக்கம்’’ என்கிறார் இளம் புத்தக ஆர்வலர் முனைவர் லக்ஷ்மி ப்ரியா.

புத்தகங்கள் குறித்த ஆர்வம்…

சிறுவயதிலிருந்தே புத்தகம் படிப்பது என்பது எனது பெரும் ஆர்வம். எனது பிறந்தநாளுக்கு கூட மற்றவர்கள் புத்தகம் பரிசளிப்பதையே விரும்புவேன். நான் முதலில் தேர்வு செய்தது சி.ஏ படிப்பைதான். மாலை நேரங்களில் ஓய்வு கிடைக்க ஆங்கில இலக்கியத்தை தேர்வு செய்து படித்து வந்தேன். பல்வேறு புத்தகங்களை தேடித் தேடி படிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அப்போதுதான் புத்தகங்கள் மீது கூடுதல் காதல் எழுந்தது. நாம் ஏன் இத்துறையை தேர்வு செய்யக்கூடாது என்று தோன்றியது. பதிப்பாளருக்கும் புத்தகம் எழுதுபவருக்கும் பாலமாக செயல்படுவதுதான் எங்களது பணி. எழுத ஆர்வமுள்ளவர்களை எழுத வைத்து அவர்களின் புத்தகங்களை அச்சில் கண்டு மகிழ துணை நிற்கிறோம்.

அரசுப் பள்ளி குழந்தை கள் எழுத நிறைய பயிற்சி வகுப்புகளை நடத்தி இருக்கிறோம். இதுவரை 1500க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்கள். வயதானவர்களில் 800க்கும் மேற்பட்டோர் தங்களது முதல் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளனர். இதுவரை 14 மொழிகளில், 1000 புத்தகங்களுக்கு மேல் எங்க நிறுவனம் வாயிலாக வெளியிட்டுள்ளோம் என்பதை பெருமிதத்துடன் சொல்லிக் கொள்கிறோம்.

ஆட்டிசம் குழந்தைகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தி பல குழந்தைகளை எழுத வைத்துள்ளோம். எழுத்தில் ஆர்வமுள்ள அரசுப் பள்ளி குழந்தைகளுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறோம். அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வசித்து வரும் 7,000 குழந்தைகளுக்கு மேல் பயிற்சி கொடுத்து எழுத வைத்திருக்கிறோம். தனியாக எழுத இயலாதவர்களை ஒரு குழுவாக எழுத வைத்தும் புத்தகங்களை வெளியிட உதவுகிறோம். எழுத இயலாதவர்களுக்கு கெஸ்ட் ரைட்டர்கள் மூலமாக எழுதி புத்தகங்களை வெளியிட உதவுகிறோம். இதற்காக நிறைய இடங்களுக்கு பயணித்து பயிற்சி பட்டறைகள் நடத்தி வருகிறோம்.

பொதுவாக எழுதும் ஆர்வமுள்ளவர்கள் 6 வயதில் இருந்து 90 வயது வரை இருக்கிறார்கள். அவர்களை திறம்பட எழுத வைப்பதோடு புத்தக வெளியீடு செய்வதுதான் எங்களது பணி. குழந்தைகளை எழுத வைப்பதில் நிறைய சவால்கள் இருக்கிறது. குழந்தைகளுக்கு உரையாடல்கள் மூலம், படங்கள், சிந்திக்க வைக்கும் புதிர்கள் மூலமும் சிந்தனைத் திறனை அதிகரித்து, அவர்களின் கற்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். முக்கியமாக நம்முடைய கலாச்சாரம், பண்பாடு குறித்து கற்பிக்கிறோம்.

இதர பணிகள்…

பாரம்பரியக் கலைகளை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் ‘உலா’ என்கிற அமைப்பை துவக்கி பல்வேறு கலைப் பயிற்சி வகுப்புகளை எடுத்து வருகிறோம். வர்லி ஆர்ட், கோல்ட் ஆர்ட் குறித்து பயிற்சி அளிக்கிறோம். அதற்கான ஒர்க் ஷாப்களையும் நடத்தி வருகிறோம். நிறைய கல்லூரிகளில் சிறப்பு விரிவுரையாளராக கலந்து கொண்டு பயிற்சி அளித்து வருகிறேன். மேலும், இது போன்ற நிறைய எதிர்கால திட்டங்கள் தொடர்பாக முன்னெடுப்புகள் மற்றும் புதிய முயற்சிகளில் இறங்கியுள்ளோம்.

மொழிபெயர்ப்பு பணிகள்…

இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். ஒரு கவிதைத் தொகுப்பு நூலையும் வெளியிட்டுள்ளேன். எங்க பதிப்பகத்தின் வாயிலாக மொழி பெயர்ப்பு, மற்றவர்களுக்காக எழுதும் கெஸ்ட் ரைட்டிங் உள்ளிட்ட பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். Abdul Meets Endangered Animal Series நூல் எனது மொழிபெயர்ப்பில் வந்த சிறப்பான நூல் எனலாம்.

புத்தகங்கள் விற்பனை மற்றும் வாசிப்புகள்…

இன்றைய சூழலில் புத்தகங்கள் விற்பனை மற்றும் வாசிப்புகள் குறித்தான விஷயங்கள் சிறப்பாகவே இருக்கிறது. பிரபலங்கள் தாங்கள் வாசித்த புத்தகங்கள், அதன் சிறப்பம்சம் குறித்த தகவல்களை பொதுவெளியில் பகிர்கிறார்கள். அதனால் பலருக்கும் அதனை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது. புத்தக வாசிப்புகள் அதிகமாகி வருவது சிறப்பான விஷயம்தான். புத்தகங்கள் திரைப்படங்களாக வருவதும் ஆரோக்கியமான விஷயம். அதேபோல் எழுதும் ஆர்வங்கள் பலரிடம் காண முடிகிறது. இனி வரும் காலங்களில் இளைய தலைமுறையினரிடம் புத்தக வாசிப்புகள் அதிகமாக இருக்கும் என்பதே என் நம்பிக்கை’’ என ஆர்வமுடன் கூறும் லக்ஷ்மி ப்ரியா, பொன்மகள், உமன் ஐகான், யுவ சக்தி விருது, சர்வதேச சமூக சேவையாளர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

தொகுப்பு: திவ்யா, காஞ்சிபுரம்.

Tags : Saffron Company ,Dr ,Lakshmi Priya ,
× RELATED அப்பாவின் கனவை நிஜமாக்கிவிட்டேன்!