×

அம்மாவின் அன்புடன் அழகு சாதனப் பொருட்கள்..!

நன்றி குங்குமம் தோழி

‘‘கோவிட் தாக்கத்திற்குப் பிறகு இன்று பலரும் மண்ணை பொன்னாக்கும் இயற்கை விவசாயம் முதல் மாசற்ற உடல் சருமம், உணவு என அனைத்திற்கும் இயற்கையை நாடி பயணிக்கிறோம் என்றால் அது மிகையல்ல’’ என்கிறார் வைர வைஷ்ணவி கார்த்திகேயன். இவர் தன் குடும்பத்துடன் இணைந்து இயற்ைக முறையில் சோப் மற்றும் இதர அழகு சாதனப் பொருட்களை தயாரித்து வருகிறார். ‘‘நாங்க குடும்பமாகத்தான் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை நாங்க தயாரிக்கும் பொருட்கள் தரமானதாக இருக்க வேண்டும். எங்களின் சோப்பினை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் அதனால் பலன் அடைய வேண்டும் என்பதுதான் எங்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது’’ என்று நெகிழ்ச்சியுடன் பேச ஆரம்பிக்கிறார் திருச்சியை சேர்ந்த வைர வைஷ்ணவி.‘‘நான் பி.காம் மற்றும் சைக்காலஜியில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறேன்.

ஆன்லைன் முறையில் காஸ்மெட்டாலஜி மற்றும் காஸ்மெட்டிக் சயின்ஸ் குறித்து டிப்ளமோ பயின்றிருக்கிறேன். எங்களுடையது சாதாரண குடும்பம்தான். என் அப்பா சில வருடம் முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். அம்மா இல்லத்தரசி என்பதால் எங்களின் குடும்ப வருமானம் பாதிக்கப்பட்டது. அம்மா இல்லத்தரசி என்றாலும் பாட்டி வைத்தியம் எல்லாம் அவர்களுக்கு அத்துப்படி. அவங்க தேங்காய் எண்ணெய் கொண்டு இயற்கை முறையில் தயாரிக்கும் சோப்பினைதான் நானும் என் தம்பியும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். அந்த சோப்பினை பயன்படுத்திய பிறகுதான் முகத்தில் முகப்பரு குறைந்து பொலிவாக மாறியது. எங்க இருவருக்கும் இருந்த சருமப் பிரச்னைகள் நீங்குவதை கண்கூடாக நாங்க உணர்ந்தோம்.

நாங்க பயன்படுத்துவதைப் பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள், நண்பர்கள், உறவுக்காரர்கள் கேட்க அவர்களுக்கும் கொடுத்தோம். நன்றாக இருப்பதாக பாராட்டினார்கள். அப்போது நாங்க இதை பிசினஸாக செய்யவில்லை. கேட்பவர்களுக்கு மட்டும் அம்மா தயாரித்து தந்து வந்தாங்க. அப்பாவின் மறைவுக்குப் பிறகு குடும்பத்தை நடத்தணும். அதற்கு பணம் வேண்டும். அந்த சமயத்தில்தான் இதையே ஏன் தொழிலாக செய்யக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. அப்படித்தான் ரசாயனம் கலக்காமல், இயற்கை முறையில் உடலுக்கும், சருமத்திற்கும் சோப் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்க ஆரம்பித்தோம்.

மஞ்சள், வேம்பு, உருளைக்கிழங்கு, ஆலிவ் ஆயில், செம்பருத்தி போன்ற பல்வேறு பொருட்களை வைத்து அம்மா சோப்பினை தயாரிக்க ஆரம்பித்தார். நானும் காஸ்மெட்டாலஜி குறித்து படித்து இருப்பதால் அம்மாவுக்கு உதவியாக இந்த தொழிலில் முழுமையாக ஈடுபட ஆரம்பித்தேன். 2022ல் ‘வா ஹோம் மேட் சோப்’ என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலினை தொடங்கினோம். எங்களின் தயாரிப்புகள் குறித்து இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோம். நல்ல வரவேற்பு கிடைத்தது. அம்மாவின் அனுபவம், என்னோட பயிற்சி இணைந்து நாங்கள் தயாரித்து விற்பனை செய்யும் சோப்புகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்கள் அதிகரிக்க ஆரம்பித்தார்கள்.

கற்றாழை, ஆவாரம்பூ, வாழைப்பழம், பீட்ரூட், கேரட், ஆட்டுப்பால், செம்பருத்தி, புதினா, முல்தானி மிட்டி, வேம்பு, மஞ்சள் கொண்டு பேபி சோப், சவரம் சோப், வீடு துடைக்க லிக்விட், பாத்திரம் கழுவும் லிக்விட் என 35 வகையான சோப்புகளை தயாரிக்கிறோம். மேலும், சன்ஸ்கிரீன், ஷாம்பு, லிப்பாம், பேஸ் வாஷ், பேஸ்மாஸ்க், மூலிகை ஹேர்டை, கை, கால் மாஸ்க், குங்குமமாதி தைலம் என 30க்கும் மேற்பட்ட அழகு சாதனப் பொருட்களும் உள்ளன. சோப் மட்டும் இயற்கை முறையில் இல்லாமல், அதன் பேக்கிங்கும் மக்கிப் போகும் வகையில் தயாரிக்கிறோம்.

சோப் நறுமணமாக இருக்க வெட்டிவேர், மகிழம்பூ, மனோரஞ்சிதம், குங்குமப்பூ, சந்தனம், ரோஜா, ஆரஞ்சு, லாவெண்டர் போன்றவற்றை பயன்படுத்துகின்றோம். ஆயுர்வேதத்தில் கபம், பித்தம், வாதம்னு சொல்லுவாங்க. அதுபோல வாடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் அவர்களது உடல் நலம் குறித்து தெரிந்து கொண்டு அதற்கேற்ப கஸ்டமைஸும் செய்து தருகிறோம்.

எங்களுக்கு வாடிக்கையாளர்கள்தான் முக்கியம் என்பதால், எங்களின் தயாரிப்பில் ரசாயனங்களை முற்றிலும் தவிர்க்கிறோம். சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் உள்ள பியூட்டி பார்லர்களுக்கும், சப்ளையர்களுக்கும் மொத்த விற்பனை முறையில் வழங்கி வருகிறோம்’’ என்றவருக்கு சிறந்த சமூக சேவகி மற்றும் அவரின் அம்மாவிற்கு சிங்கப்பெண் விருது கிடைத்துள்ளது. மனித உடலுக்கு சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் பொருட்களை தயாரிக்க அவர்களால் முடிந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் இந்த தாயும் மகளும்.

தொகுப்பு: மதுரை ஆர்.கணேசன்

Tags : Amma ,Kumkum ,Covid ,Vaira Vaishnavi Karthikeyan ,
× RELATED அப்பாவின் கனவை நிஜமாக்கிவிட்டேன்!