பாமக இளைஞர் அணி பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் 8 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இதை தொடர்ந்து மேடையில் பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: இளைஞர்களால் எத்தனையோ நாடுகளில் பல புரட்சிகள் நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் அதுபோன்ற ஒரு புரட்சி நடக்கும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நாம் இணைந்திருக்கிறோம், நல்ல கூட்டணியில் நாம் சென்று இருக்கிறோம். குறைந்தது 200 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெறும்.
கூட்டத்திற்கு நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள், என்னை அழைக்கவில்லை, பெயர் போடவில்லை என்று ஒதுங்கி நிற்கக்கூடாது. மற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் என்னை அழைத்து சொல்ல வேண்டும், உங்கள் தம்பிகள் போல மற்றவர்கள் யாரும் இருக்க முடியாது என்று. அந்த அளவிற்கு நடந்துகொள்ள வேண்டும். ஐயாவை (ராமதாஸ்) சுற்றி சில துரோகிகள் இருக்கிறார்கள், அதில் முக்கியமான துரோகி ஜி.கே.மணி. நமக்கு தான் நீதிமன்றம் நல்ல தீர்ப்பு கொடுத்திருக்கிறது.
ஆனால் ஐயாவிடம் தவறாக சொல்லி இருக்கிறார்கள். ஐயாவிடம் (ராமதாஸ்) தொடர்ந்து பொய்யாக சொல்லி அவரது மனதை மாற்றுகிறார்கள். ஜி.கே.மணி செய்த துரோகங்களை பற்றி பேச நிறைய இருக்கிறது. ஆனால் இந்த கூட்டத்தில் அதைப் பற்றி பேச வேண்டாம். அந்த அளவுக்கு அவருக்கு தகுதி கிடையாது. இதைப் பற்றி நான் வேறு ஒரு கூட்டத்தில் பேசுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
