×

ஆஸ்திரியாவில் இருந்து இந்தியாவிற்கு தொன்மையான கல் தூண் மீட்டு கொண்டு வரப்படும்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: விஷ்ணு, கருடர், முனிவர் மற்றும் அம்ச பறவை (அலங்கரிக்கப்பட்ட அன்னம்) ஆகியவற்றின் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகிற அரை டன் எடை கொண்ட தொன்மையான கல்தூண் ஆஸ்திரிய நாட்டில் இருப்பது தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவு, திருச்சி சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனுக்கு தெரியவந்தது. விசாரணையில். கல்தூணின் புகைப்படங்களை பெற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் காப்பாளர் பி.எஸ்.ஸ்ரீ ராமன் கருத்துரை பெறப்பட்டது. அதில், இந்த கல்தூண் கிரானைட் கல்லால் ஆன, வட தமிழகத்தை சார்ந்த (தர்மபுரி-கிருஷ்ணகிரி மண்டல) அல்லது 18-19ம் நூற்றாண்டை சேர்ந்த ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டம் அல்லது கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தை சார்ந்தாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த தொன்மையான கல் தூண் ஆன்ட்டிக்விட்டி அன்ட் ஆர்ட் டிரஷ்ஷர் சட்டம் 1972-ன் படி வரையறுக்கப்பட்டுள்ளது. கடந்த 2025 அக்டோபர் 30ம் தேதி கல்தூண் கடத்தப்பட்டுள்ள தகவல் ஆஸ்திரிய நாட்டின் சட்ட அமலாக்க முகமையான, கலை சொத்துகள் பிரிவு, கூட்டாட்சி அமைச்சகத்தின் உள்துறை குற்ற உளவுத்துறை சேவைகள் பிரிவின் அதிகாரி அனிதா மற்றும் வியன்னாவின் இந்திய தூதரக அதிகாரி தேவி கோபிநாத் ஆகியோருக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வாயிலாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த கல்தூண் தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு கோயிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது. திருட்டு, போலி ஆவணங்கள் தயாரித்தல், அதற்கான ஆதாரம் மற்றும் கடத்தல் நடந்திருப்பதாக தெரியவருகிறது. எனவே, சிலை திருட்டு தடுப்பு பிரிவு, காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் கல்பனா நாயக் உத்தரவுப்படி சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் நிலைய குற்ற சட்ட பிரிவுகள் 111இ 305, 336(2), 340(2) பி.என்.எஸ் வழக்கு பதியப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொன்மையான கல்தூணை ஆஸ்திரியா நாட்டிலிருந்து இந்தியாவிற்குமீட்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : India ,Austria ,Idol Smuggling Prevention Unit ,Chennai ,Vishnu ,Garuda ,Parava ,Tamil Nadu Idol Smuggling Prevention Unit ,Trichy ,
× RELATED சிங்கப்பெருமாள்கோவில் அருகே ஒரே...