×

புழல் 23, 24வது வார்டுகளில் நிறைவு பெறாத மழைநீர் கால்வாய் பணி: கழிவுநீரால் நோய்தொற்று பரவல்

புழல்: மாதவரம் மண்டலத்தில் உள்ள புழல் 23 மற்றும் 24வது வார்டு பகுதிகளில் உள்ள தெருக்களில் இன்னும் மழைநீர் கால்வாய் பணிகள் நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி தெருக்கள் மற்றும் சாலைகளில் தேங்கியிருக்கும் கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரிப்பினால் மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றும் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட புழல் 23 மற்றும் 24வது வார்டு பகுதிகளான காவாங்கரை, கண்ணப்பசாமி நகர், திருமலை நகர், கன்னடபாளையம், புழல் ஜிஎன்டி சர்வீஸ் சாலை, புனித அந்தோணியார் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட புதிய மழைநீர் கால்வாய் பணிகள், பல்வேறு இடங்களில் இதுவரை நிறைவு பெறாமல், அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. குறிப்பாக, புழல் கேம்ப் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை எதிரில் இருந்து சைக்கிள் ஷாப் பகுதிக்கு செல்லும் ஜிஎன்டி சர்வீஸ் சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு, எம்.ஜி.ஆர் சிலை அருகில் முடிக்கப்படாமல் திறந்த நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

இதனால் இதுபோன்ற முற்றுப்பெறாத மழைநீர் கால்வாய்களில் இருந்து வெளியேறி வரும் கழிவுநீர், புழல் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயம், கால்பந்தாட்ட விளையாட்டு திடல், அரசு துவக்க பள்ளி, அம்மா உணவகம், மாநகராட்சி மினி மருத்துவமனை உள்பட பல்வேறு தெருக்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நிற்கிறது. சாலை மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீர் கொசு புழுக்கள் உற்பத்தி அதிகரித்து, அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, புழல் 23 மற்றும் 24வது வார்டு பகுதிகளில் நிறைவு பெறாத மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கவும், அப்பகுதிகளில் சுகாதார மற்றும் தூய்மைப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி மேயர் உள்பட சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Maadwaram ,
× RELATED சிங்கப்பெருமாள்கோவில் அருகே ஒரே...