ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தளி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மலர் சாகுபடி செய்யப்படுகிறது. சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பசுமை குடில்கள் அமைத்து ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தாஜ்மஹால் (சிவப்பு) நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக். சவரன், அவலஞ்சர், பெர்னியர், உள்ளிட்ட 22 வகையான ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. ஜெய்பூர், டெல்லி, மும்பை, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ரோஜா மலர்களை விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
மேலும் இந்தாண்டு காதலர் தினத்தையொட்டி இணைய வழி வர்த்தகம் அதிகரிப்பால் ஆர்டரின் பேரில் ஓசூரிலிருந்து தினமும் 10 லட்சம் ரோஜா மலர்கள் அனுப்பி வைக்கப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு காதலர் தினத்தில் ரூ.300க்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு கட்டு ரூ.600 முதல் ரூ.800 வரையில் விற்பனையாகிறது. குறிப்பாக அடர் சிவப்பு நிறத்தில் உள்ள தாஜ்மஹால் 80சதவீதம் அதிக ஆடர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
