×

உளுந்து சாகுபடி விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் பதிவு செய்ய கலெக்டர் வேண்டுகோள்

திருவள்ளூர், பிப்.11: திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள், விலை ஆதரவு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கலெக்டர் மு.பிரதாப் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்கள் விளைவித்த உளுந்து விளைபொருளை மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக 50 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, அரசு விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு 1 கிலோ உளுந்து விலை ரூ.78 என கொள்முதல் செய்யப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இத்திட்டம் காஞ்சிபுரம் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கும், செங்குன்றம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு 50 மெ.டன் இலக்காகவும், தரம் பிரிக்கப்பட்ட உளுந்து கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் கணினி சிட்டா, அடங்கல், விவசாயியின் புகைப்படம், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கின் புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் கீழ்காணும் ஒழுங்கு முறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர்களை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

செங்குன்றம் ஒழுங்கு முறை விற்பனைக்கூட பொறுப்பாளர்கள் பெயர்: தா.முகமது இர்பான்-7904620104, கெ.கோவர்த்தனன் – 8946006124. ஒரு ஹெக்டர் சாகுபடி பரப்பிற்கு 531 கிலோ உளுந்து மட்டுமே கொள்முதல் செய்திட அரசு வழிகாட்டி நெறிமுறை வழங்கப்பட்டும். இத்திட்டத்தினை 25.3.2026 வரையில் திருவள்ளுர் மாவட்டத்தில் கொள்முதல் செய்திடவும், கொள்முதலுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகள், விலை ஆதரவு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thiruvallur ,Collector ,M. Pratap ,Tiruvallur district ,
× RELATED பெரியபாளையம் அருகே பைப் லைன் உடைந்து வீணாகும் தண்ணீர்