×

பெரியபாளையம் அருகே பைப் லைன் உடைந்து வீணாகும் தண்ணீர்

ஊத்துக்கோட்டை, பிப்.11: பெரியபாளையம் அருகே, மாம்பள்ளம் ஊராட்சியில் உள்ளது காதர்வேடு கிராமம். இங்கு விவசாயிகள், வியாபாரிகள் என 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களின் குடிநீர் வசதிக்காக 25 வருடங்களுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த குடிநீர் தொட்டிக்கு அங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் கடந்து, ஆழ்துளை கிணறு மூலம் நீரை ஏற்றி அதை ஊராட்சி சார்பில் மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கிராம சாலை ஓரத்தில் குடிநீர் பைப் உடைந்து கடந்த 4 நாட்களாக தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி செயலாளரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Periypalayam ,Uthukkottai ,Katharvedu ,Mamballam panchayat ,
× RELATED உளுந்து சாகுபடி விவசாயிகள் விலை ஆதரவு...