திருவள்ளூர், பிப்.10: திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான உணவு திட்ட விரிவாக்கம் தொடங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், போளிவாக்கம் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டம் விரிவாக்கம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவந்தன், தலைமை செயலாளர் முருகானந்தம், அரக்கோணம் எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ச.சந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, டி.ஜெ.கோவிந்தராஜன், சுதர்சனம், துரை சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்ட விரிவாக்கத்தினை தொடங்கி வைத்து, தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் நடந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி அலுவலக வளாகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் குமரவேல், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அபிராமி, செயல் அலுவலர் சதீஷ், கவுன்சிலர்கள் கோகுல்கிருஷ்ணன், கோல்டு மணி, சுமலதா நரேஷ், கல்பனா பார்த்திபன், சமீமா ரகீம் , வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியில் தலைமை எழுத்தர் முருகவேல் நன்றி கூறினார்.
இதேபோல் பூந்தமல்லி நகராட்சியில் பணிபுரியும் 300 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் நகர் மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறினார். இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தர், மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், நகராட்சி ஆணையர் சரவணகுமார், நகர் மன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், மீனாட்சி ஜெய்சங்கர், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.
திருவேற்காடு நகராட்சியில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. நகர் மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறினார். இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ், நகராட்சி ஆணையாளர் ராமர், சுகாதார அலுவலர் அருண், சுகாதார ஆய்வாளர் மதன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் லயன் ரமேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.
திருத்தணி நகராட்சியில் பணியாற்றி வரும் 187 நிரந்தர மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நகராட்சிக்கு உட்பட்ட 6 மையங்களில் காலை உணவு வழங்கும் திட்டத்தை நகர்மன்ற துணைத் தலைவர் சாமிராஜ் தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி பொறியாளர் செல்வகுமார், நகர்மன்ற கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் பணியாற்றும் 40க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டத்தை பேரூராட்சி தலைவர் ஏ.ஜி.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசங்கர் உட்பட பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பள்ளிப்பட்டு பேரூராட்சியிலும் உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
