×

கோவை நமக்கு செட் ஆகாது போட்டியிட தயங்கும் தவெக

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட தவெக நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படலாம் என கூறப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. நடிகர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் வேறு எந்த கட்சியும் இணையவில்லை. பெரிதும் எதிர்பார்த்த டிடிவி அமமுக, பாஜவின் நிர்பந்தத்தால் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்று விட்டது. கூட்டணி ஆட்சி அமைப்போம், ஆட்சியில் பங்கு தருவோம் என்ற ஆசை வார்த்தைகளை விஜய் அள்ளிவிட்டும் யாரும் அந்தக் கட்சியை சீண்டியதாக தெரியவில்லை. இதனால் கிட்டத்தட்ட தனித்து போட்டியிட வேண்டிய சூழலில் தவெக உள்ளது.

யாருமே கூட்டு சேராததால் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளிலும் டெபாசிட் வாங்குவதே சிரமம் என்ற சூழ்நிலை உள்ளதால், தேர்தலில் போட்டியிட தவெக நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். பலம் வாய்ந்த திமுக, அதிமுக கூட்டணிகளை மீறி வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதால், தேர்தலுக்கு செலவு செய்வது வீண் விரயம் என்பதை உணர்ந்து பலரும் ஜகா வாங்கி வருகின்றனர். கோவை தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ள விக்னேஷ் மட்டுமே, கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் மற்ற தொகுதிகளில் போட்டியிட மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் யாரும் முன்வரவில்லை.

கோவை மாவட்டத்தில் தவெகவில் மக்களிடம் பிரபலமான நபர்கள் யாரும் இல்லை என்பதாலும், தேர்தல் செலவு செய்ய மாவட்டச் செயலாளர்கள் தயக்கம் காட்டி வருவதாலும் யாரை போட்டியிட செய்வது என தவெக தலைமை குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் செங்கோட்டையனின் ஆதரவாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கவும் தவெக தலைமை விரும்பாததால், தேர்தலில் தோற்றாலும் மூன்றாவது இடத்திற்கு வரும் அளவிற்கு வாக்குகளை வாங்கும் பலம் கொண்ட, செலவு செய்யும் திறனுள்ள வேட்பாளர்களை வலைவீசி தேடி வருகிறார்களாம். வேட்பாளர்கள் யாரும் கிடைக்கவில்லை என்றால், தேர்தல் செலவிற்கு பணம் கொடுத்து வேட்பாளர்களை நிற்க வைக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : KOWAI ,DWEKA ,KOWAI DISTRICT ,Tamil Nadu Assembly ,Vijay ,
× RELATED மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட...