×

ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்காத விவகாரம் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்

டெல்லி : மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கடந்த வாரம், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இந்தியா-சீனா எல்லை விவகாரம் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி எம்.எம்.நரவனே எழுதிய புத்தகத்தில் இருந்து சில தகவல்களை மேற்கோள் காட்டி பேச முயன்றார். இதை தடுத்த ஆளும் தரப்பு எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

கடைசி வரை ராகுல் காந்திக்கு பேச அனுமதி தரப்படவில்லை. இதை கேள்வி கேட்ட காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்களை சபாநாயகர் ஓம்பிர்லா சஸ்பெண்ட் செய்தார். மேலும், பெண் எம்பிக்கள் மூலம் பிரதமர் மோடி மீது விரும்பத்தகாத செயல்கள் செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்ததாக சபாநாயகர் ஓம்பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இதனால் மக்களவையில் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே ஜனாதிபதி உரை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுவதாகவும் தலைவர்கள் குற்றம் சாட்டினர். இந்த பரபரப்பான சூழலில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நீக்கக் கோரி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இன்று(பிப். 10) நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதில் 125 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 94(சி) படி, சபாநாயகரை நீக்க 14 நாட்களுக்கு முன்னதாக நோட்டீஸ் வழங்கி, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி சபையில் பேச அனுமதிக்கப்பட்டால் இந்த தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளது, இல்லையெனில் சட்டப்பூர்வமாக இது முன்னெடுக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சிகளிடம் போதிய பலம் இல்லை என்பதால் இந்த முயற்சி தோல்வியடையும் என ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Lok Sabha ,Speaker ,Om Birla ,Rahul ,Delhi ,Budget Session of Parliament ,Rahul Gandhi ,
× RELATED பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை...