×

சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கிராமத்தில் சிசிடிவி கேமரா பொருத்தம் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை செங்கம் அருகே 50 ஆடுகள் பலி எதிரொலி

செங்கம், பிப். 10: செங்கம் அருகே சிறுத்தை தாக்கி 50 ஆடுகள் பலியானதால், கிராமத்திற்குள் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமராவை பொருத்தி வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். செங்கம் அடுத்த முத்தனூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கோனாந்தாங்கல் கிராமத்தில் வசிக்கும் மக்கள், ஆடு வளர்ப்பதை தொழிலாகக் கொண்டுள்ளனர். பகலில் ஆடுகளை மேய்த்துவிட்டு, மாலையில் தங்கள் விளைநிலங்களில் அமைக்கப்பட்ட பட்டிகளில் ஆடுகளை அடைத்து வைப்பது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே கிராமத்தை சேர்ந்த 4 பேரின் பட்டிகளுக்குள் புகுந்த சிறுத்தை சுமார் 50க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கடித்துக் கொன்றுள்ளது. மேலும் அதேபகுதியில் விவசாயி ஒருவரின் பட்டியில் இருந்த 10க்கும் மேற்பட்ட ஆடுகளையும் கடித்துக் கொன்றதுடன், மேலும் 10க்கும் மேற்பட்ட ஆடுகளைக் காணவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் முருகன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து, ஆடுகளைக் கடித்துக் கொல்லும் விலங்கு சிறுத்தையா அல்லது வேறு வனவிலங்கா என்பதை உடனடியாகக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் கோனாந்தாங்கல் கிராமத்தில் ஆடு பட்டிகளுக்கு அருகே நேற்றுமுன்தினம் இரவு சிசிடிவி கேமரா பொருத்தினர். இரவு முதல் நேற்று அதிகாலை வரை வனத்துறையினர் தங்கி கண்காணித்தனர். ஆனால் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து ஏதும் தகவல் இல்லை. ஆனால் அங்கு சிறுத்தையின் நடமாட்டம் குறித்து தொடர் கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபடுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chengam ,Konanthangal ,Muthanur forest ,
× RELATED 3,44,940 பேருக்கு குடற்புழு நீக்க...