திருவண்ணாமலை, ஜன.30: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஜனவரி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை 2வது நாளாக நேற்று எண்ணப்பட்டது. அதில், ரூ. 22.77 லட்சத்தை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, ஜனவரி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, ரூ.5.4 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 190 கிராம் தங்கம், 2390 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்நிலையில், இரண்டாவது நாளாக கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. அதில், ரூ.22.77 லட்சத்தை பக்தர்கள் செலுத்தி இருந்தனர். அதன்படி, கடந்த 2 நாட்கள் நடந்த காணிக்கை எண்ணும் பணியில் ரூ.5.68 கோடியை பக்தர்கள் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
