×

பாஜவுக்கு ஆர்எஸ்எஸ் ஆர்டர் மூத்த தலைவர்களுக்கு ‘கல்தா’

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜ இளையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு வியூகத்தை வகுத்துள்ளது. இத்தேர்தலில் அதிகப்படியான புதிய மற்றும் இளைஞர்களை வேட்பாளர்களாக நிறுத்த பாஜ திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இளைய தலைமுறை வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் இந்த ‘யுவ சக்தி’ மாஸ்டர் பிளான் வகுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போன்ற மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை விட, தொகுதிப் பொறுப்பாளர்களாக இருந்து இளைய வேட்பாளர்களை வழிநடத்தப் பணிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு எப்போதும் புதிய மற்றும் களப்பணியில் தீவிரமாக இருக்கும் இளைஞர்களை முன்னிறுத்துவதையே தனது நீண்டகாலக் கொள்கையாகக் கொண்டுள்ளது. டெல்லி போன்ற மாநிலத் தேர்தல்களில் புதிய முகங்களுக்கு வாய்ப்பளித்ததைப் போலவே தமிழகத்திலும் இந்த அணுகுமுறை பின்பற்றப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. பாஜ யுவ மோர்ச்சா மூலம் மாநிலம் முழுவதும் இளைஞர் நாடாளுமன்றம் மற்றும் மாதிரி சட்டமன்றம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, அரசியலில் ஆர்வமுள்ள இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணிகளை பாஜ மேற்கொண்டு வருகிறது.

தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதில் இளையவர்களுக்கும், தேர்தல் வியூகம் மற்றும் பிரசாரப் பணிகளில் அனுபவம் வாய்ந்த மூத்தவர்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதே பாஜவின் தற்போதைய திட்டம். தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் நிலையில், பாஜவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. முன்னதாக அவர் நாகர்கோவில் அல்லது பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிடலாம் என்று பேசப்பட்டு வந்தது.

பாஜ மேலிடம் தமிழகத்தின் 41 முக்கிய தொகுதிகளைக் கவனிக்கும் வகையில் 8 தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. இந்தப் பட்டியலில் பொன்.ராதாகிருஷ்ணன் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காகப் பணியாற்றுவார் என்றும், அவர் நேரடியாகத் தேர்தலில் களம் இறங்கப்போவதில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொன்.ராதாகிருஷ்ணன் பொதுவாக கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலேயே அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். கடைசியாக நடைபெற்ற 2024 மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை விட, தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மேலிடம் விரும்பும் தற்போதைய சூழலில், தமிழக பாஜவில் உள்ள இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் வகையிலும், கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையிலும் அவருக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பொன். ராதாகிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்களும் தேர்தல் களத்திலிருந்து விலகி, தேர்தல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக பாஜ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே வேளையில் கட்சி மேலிடம் நிர்ப்பந்தம் செய்து நிறுத்தினால் மட்டுமே பொன்னார் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

* தங்கம் விலை உயர மோடிதான் காரணம்: டெல்லி பிரதிநிதி பகீர்; எடப்பாடி என்ன கிழிச்சாரு என கேள்வி
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் பேசியதாவது: சொன்னதைச் செய்வேன் என்று கூறுகின்ற எடப்பாடி பழனிசாமி அவர்களே. நீங்கள் செய்து கிழித்தீர்களா? நீங்கள் எதனைச் செய்து கிழித்தீர்கள், முடித்தீர்கள்?. எதனைச் செய்து சாதித்தீர்கள்? இன்றைக்கு தங்கத்தின் விலை என்ன? அதற்கு நாங்களா காரணம்?. இன்று யாராவது ஒரு பவுன் நகை வாங்க முடிகிறதா? தங்க நகையை வாங்க வேண்டாம் அய்யா. கவரிங் நகையை அணிந்து போனாலே பிடுங்க போறான். ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேலே போய் விட்டது.

இன்று 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செல்கின்ற தங்கம் விலைக்கு யார் காரணம். பிரதமர் மோடி இல்லையா. மோடி தானே தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறார். அவரிடம் இதுகுறித்து கேட்க வேண்டாமா? அதற்கு எதிராகச் சீற வேண்டாமா? அதனை எதிர்க்க வேண்டாமா? பெண்கள் பயன்படுத்தும் நகைக்கு வரிவிலக்கு கொடுக்க வேண்டாமா? அல்லது ஏதாவது விலையாவது குறைத்து கொடுக்க வேண்டாமா?. இல்லையே. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐந்து பவுன் வரை நகை அடகு வைத்திருந்தவர்களின் நகைகளை மீட்டு, அவர்கள் வீட்டுக்கே கொண்டு போய்ச் சேர்த்தார். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : RSS ,Bajaj ,Kalda ,Tamil Nadu ,BAJA ,Yua Shakti ,
× RELATED சொல்லிட்டாங்க…