×

கலங்கரை விளக்கம்-திருமயிலை மெட்ரோ ரயில் சுரங்கம் பணி நிறைவு

 

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல், யூஜி-01 ஒப்பந்தத்தின் கீழ், ‘கழுகு’ என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் மெரினா கலங்கரை விளக்கத்திலிருந்து சுரங்கம் அமைக்கும் பணியை ஜனவரி 2024ல் தொடங்கி வெற்றிகரமாக பணியை முடித்து திருமயிலை நிலையத்தை நேற்று வந்தடைந்தது. இது இந்த ஒப்பந்தத்தின் கீழ் எட்டப்பட்ட முதல் முக்கிய மைல் கல்லாகும்.

மெட்ரோ வழித்தடம் 4ல் மெரினா கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பகுதிகள் யூஜி-01 மற்றும் யூஜி-02 என இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 4 கி.மீ. இரட்டை சுரங்கப்பாதைகளை கொண்டுள்ளது. இந்த வழித்தடத்தில் இரு திசைகளிலும் தோராயமாக 16 கி.மீ. நீளத்தில் மொத்த சுரங்கப்பாதையை முடிக்க, 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சிமி இந்தியா பிராஜெக்ட் நிறுவனத்தால் 1,981 மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட சுரங்கம் அமைக்கும் பணி, சென்னை கலங்கரை விளக்கம், அகில இந்திய வானொலி நிலையம், ரஷ்ய தூதரகம், டொமினிக் சேவியோ பள்ளி, ரோசரி சர்ச் மற்றும் செயின்ட் ரபேல் பள்ளி உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான கட்டிடங்களுக்கு அடியில் வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது.

சுமார் 151 கட்டிடங்களுக்கு கீழே செல்லும் இந்த வழித்தடத்தில், சுரங்கத்தின் ஆழம் 4.5 மீட்டர் முதல் 23 மீட்டர் வரை வேறுபடுகிறது. கடினமான பாறை அடுக்குகள் மற்றும் குறிப்பாக செயின்ட் ரபேல் பள்ளி அருகே ஏற்பட்ட எரிவாயு கசிவுபோன்ற சவாலான புவியியல் நிலைகளை எதிர்கொண்டு, சுமார் 24 மாத கால அளவில் இந்த சுரங்கப்பாதை பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. மேலும், கழுகு சுரங்கம் தோண்டும் இயந்திரத்தில் மொத்தம் 17 முறை அதன் வெட்டும் முகப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுபோல, ‘பெலிகன்’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் பனகல் பூங்காவிலிருந்து போட் கிளப் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது. இதே பகுதியில் ஏற்கனவே தொடங்கப்பட்ட மயில் சுரங்கம் தோண்டும் இயந்திரம், 1,898 மீட்டர் நீளத்தில் இதுவரை 370 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ‘பெலிகன்’ சுரங்கம் தோண்டும் இயந்திரம், பனகல் பூங்கா முதல் மீனாட்சி கல்லூரி வரை 2 கி.மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது. குறிப்பாக, செயல்பாட்டில் உள்ள இந்திய ரயில்வே தண்டவாளங்களுக்கு அடியில் எந்தவித பாதிப்புமின்றி பாதுகாப்பாக முடித்துள்ளது.

தொடர்ந்து, மயில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் பிரிக்கப்பட்டு, மீண்டும் பனகல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு, தற்போது ‘போட் கிளப்’ நிலையத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் இரண்டாவது மற்றும் இறுதியான சுரங்கம் தோண்டும் பணி இதுவாகும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்தகட்ட பணி மிகவும் சவாலான பொறியியல் தொழில்நுட்பங்களைக் கொண்டது. குறிப்பாக, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள முதல்கட்ட மெட்ரோ சுரங்கப் பாதைகளுக்கு அடியில், தரைமட்டத்தில் இருந்து சுமார் 30.2 மீட்டர் ஆழத்தில் இந்த புதிய சுரங்கம் தோண்டப்பட உள்ளது. இந்த பணிகள் அனைத்தும் 2026 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags : Lighthouse ,Thirumaylai ,Chennai ,Eagle ,Marina Lighthouse ,
× RELATED சொன்னாரு..! செஞ்சாரு..!!நகை கடன் தள்ளுபடி: 11.70 லட்சம் பேர் பயன்