×

ஏற்கனவே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கும் நிலையில் ‘பிஎம் கேர்ஸ்’ நிதி கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதியில்லை: லோக்சபா செயலகத்திற்கு பிரதமர் அலுவலகம் தகவல்

புதுடெல்லி: ‘பிஎம் கேர்ஸ்’ நிதி உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப அனுமதி இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த 1948ம் ஆண்டு முதல் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் நோக்கில் பிரதமர் தேசிய நிவாரண நிதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப நலனுக்காக தேசிய பாதுகாப்பு நிதியும் இயங்கி வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி கொரோனா போன்ற அவசர கால சூழல்களை எதிர்கொள்ள ‘பிஎம் கேர்ஸ்’ எனும் பெயரில் பொது அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இந்த நிதியானது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்போ அல்லது நாடாளுமன்ற சட்டத்தால் இயற்றப்பட்ட ஒன்றோ அல்ல என்பதால், இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது என்றும் இதுதொடர்பாக சிஏஜி தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், பிஎம் கேர்ஸ் நிதி, பிரதமர் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப அனுமதி இல்லை என்று பிரதமர் அலுவலகம் லோக்சபா செயலகத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 30ம் தேதி பிரதமர் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், லோக்சபா விதிமுறைகளின் கீழ் இந்த மூன்று நிதிகள் தொடர்பான கேள்விகள் மற்றும் விவகாரங்களை அனுமதிக்க முடியாது எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை பூஜ்ஜிய நேரம் அல்லது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது இந்த நிதிகள் குறித்து தகவல் கோரப்பட்டால், இந்த விதிகளைப் பயன்படுத்தி அவற்றைத் தவிர்க்கலாம் என்றும் ஒன்றிய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விதிகளின்படி, ஒன்றிய அரசாங்கத்தின் நேரடி கவலைக்கு உள்ளாகாத விஷயங்கள் மற்றும் அரசாங்கத்திற்குப் பொறுப்பில்லாத அமைப்புகள் அல்லது நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பிரதமர் அலுவலகம், ‘இந்த மூன்று நிதிகள் அனைத்தும் பொதுமக்களின் தன்னார்வ பங்களிப்பால் உருவாக்கப்பட்டவை மற்றும் இந்திய தொகுப்பு நிதியிலிருந்து இதற்காக எந்த ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. மேலும் இந்த நிதிகள் பொது அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டுள்ளதால், இதன் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது’ என்ற பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

கடந்த 2022-23ம் நிதியாண்டின் கணக்கு அறிக்கையின்படி, பிஎம் கேர்ஸ் நிதியில் 2023ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 6,283.7 கோடி ரூபாய் இருப்பு இருந்ததாக அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த மனுவில், பிஎம் கேர்ஸ் நிதி என்பது எந்த ஒரு அரசாங்கத்தாலும் நிர்வகிக்கப்படும் அமைப்போ அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்போ அல்ல என்று குறிப்பிட்டிருந்தது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளம் மூலம் சுமார் 2,400 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி இந்த அறக்கட்டளைக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Parliament ,Prime Minister's Office ,Lok Sabha Secretariat ,New Delhi ,
× RELATED மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை