- திருப்பூகா
- பஞ்சபுதத்
- தலாங்
- காஞ்சிபுரம்
- காமதாசி அம்மன்
- கோவில்
- ஆர்த்நரீஸ்வரர்
- அம்பிகை
- பத்மசனக் கோலன்
- தெற்கு
காஞ்சிபுரம்
பகுதி 14
(சென்ற இதழின் தொடர்ச்சி)
1. காஞ்சிபுரம்
(காமாட்சி அம்மன் கோயில்)
அடுத்ததாக அர்த்தநாரீஸ்வரரைத் தரிசித்து, பின்னர் கருவறையை நோக்கி நகர்கிறோம். அம்பிகை பத்மாசனக் கோலத்தில் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருக்கிறாள். கரங்களில் பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்பு, வில் இவை ஏந்தியுள்ளாள். பந்தகாசுரனைக் கொன்ற உக்ரம் தணிய ஆதிசங்கரர் தேவியின் முன்பாக ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்திருக்கிறார். ஸ்ரீ சக்ரத்தைச் சுற்றிலும் அஷ்ட லட்சுமிகள் உள்ளனர். அன்னையின் சந்நதிக்குள் வலப்புறம் ஊசி முனையில் ஒற்றைக் காலில் தபஸ் செய்யும் “தபஸ் காமாட்சி” உள்ளார்.
எதிரில் பிலாகாசம் எனும் வளைப்புற்றும் உள்ளது. இங்கிருந்துதான் அருவமாக இருந்த அன்னை வெளிவந்து அமர்ந்தாள். அம்பிகையைத் தரிசித்து இடப்புறம் திரும்பினால் வாராஹி காட்சி அளிக்கிறாள். இவள், அம்பிகையின் படைத் தளபதி ஆவாள். அபரிமிதமான ஆற்றல் உடைய இவள், ‘தண்டநாதா’ என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் குறிப்பிடப்படுகிறாள். கடன் தொல்லை, தொழில் நஷ்டம், துன்பங்கள், எடுத்த காரியங்களில் தோல்வி, குழப்பம், அமைதியின்மை எதுவாயிருந்தாலும் வாராஹி தீர்த்து வைக்கிறாள். காட்டுப் பன்றியின் முகம், அழகிய இளம் பெண்ணின் உடல் என்ற தோற்றத்துடன் காட்சி அளிக்கிறாள்.
மூலையில் காட்சி அளிப்பவள் அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி. நாம் பெற்றுக்கொண்ட குங்குமத்தை லட்சுமி மீது பூசிவிட்டு, அதை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். திரும்பிப் பார்த்தால், சௌபாக்ய கணபதியைத் தரிசிக்கலாம். வாராஹியின் எதிரில் உள்ளது சந்தான ஸ்தம்பம். அதன் அருகே வீற்றிருக்கிறார் சந்தான கணபதி. தசரத சக்ரவர்த்தி, சந்தான பாக்கியம் வேண்டி தலயாத்திரை மேற்கொண்ட போது, அன்னையைப் பிரார்த்தித்தார். அவருக்கு புத்ர பாக்கியம் கிடைத்தது. சந்தான பாக்கியம் வேண்டுபவர்கள் சந்தான ஸ்தம்பத்தையும் வணங்கி அருள்பெறுகின்றனர். வந்த வழியே திரும்பவும் காயத்ரி மண்டபத்தை விட்டு வெளியே வருகிறோம்.
வெளிப் பிராகாரத்தில் வந்து காசி விஸ்வநாதர் சந்நதியைத் தரிசிக்கிறோம். காமாட்சி கோயிலுக்குள் சென்றால் திசைகளை அறிவது கடினம். எனவே இத்தலம் ‘திசைமயக்கம்’ உள்ள தலம் எனப்படுகிறது. அன்னை தென் கிழக்கை நோக்கி இருப்பதால், கோபுரங்களை நோக்கும்போது திசைமயக்கம் ஏற்படலாம். ஆனால் காசி விஸ்வநாதர் சந்நதி நேர் கிழக்காக இருப்பதால், அதை வைத்துத் திசைகளைக் கணிக்கலாம். பல்லவ அரசன் ஒருவன், தன்னைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க, இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான் என்பர்.
சிறு நந்தவனம், மடைப்பள்ளி இவற்றைக் கடந்து தெற்கு கோபுரவாயிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தைக் காண்கிறோம். அம்பிகை நவராத்திரி நாட்களில் இங்கு எழுந்தருளுகிறாள். பஞ்ச கங்கை என்றழைக்கப்படும் குளக்கரையை வந்தடைகிறோம். இரண்டு சிவகணங்கள் காவலர்களாக நின்று கொண்டிருக்கிறார்கள். குளத்தின் கிழக்குக் கரையில் பூதநிக்ரஹப் பெருமாள், நின்றான், இருந்தான், கிடந்தான் எனும் நிலைகளில் மூன்று மாடங்களில் மூன்று மூர்த்திகளாக உள்ளார்.
திருமால், மல்லகன் என்ற அசுரனைத் தாக்கிய போது, அவனுடைய சரீரத்திலிருந்து வந்த ஒவ்வொரு ரத்த பிந்துவிலிருந்தும் ஒரு அசுரன் தோன்றினான். திருமால் ருத்ரரின் உதவியை நாடினார். ருத்ரர் இரண்டு பூதகணங்களை உண்டாக்கி, அசுர ரத்த பிந்துக்களைக் குடிக்க வைத்தார். அசுரர் கூட்டம் குறையவே திருமால் மல்லகனை அழித்தார். இரு பூதகணங்களும் அசுர ரத்தம் குடித்ததால் அசுரத் தன்மையை அடைந்து திருமாலை எதிர்த்தன.
திருமால் அவற்றை எதிர்த்து நின்றார். பூதங்களும் எதிர்த்து நின்றன. திருமால் பூதங்களைக் கீழே தள்ளி, அவற்றின் மேல் அமர்ந்தார். பூதங்கள் எழுந்திருக்க முயற்சி செய்தபோது, அவற்றின் மேலே படுத்துக்கொண்டார். பூதங்களின் கர்வத்தை அடக்கி, பூத நிக்ரஹப் பெருமாள் என்று பெயர் பெற்றார். சிவபெருமான், தனது ஐந்து முகங்களினின்றும் பெருகிய பஞ்ச கங்கை தீர்த்தத்தில் அனைவரையும் மூழ்கிவரச் செய்தார்.
முன், பூதங்களுடன் சண்டையிட்ட போதில், நின்றும் இருந்தும் கிடந்தும் இருந்ததுபோல, மூன்று பேத ரூபங்களாகப் பஞ்ச கங்கைக் கரையில் எழுந்தருளினார் பெருமாள். இவர் சந்நதிகளுக்கு எதிரே, குளத்தின் மறுகரையில் நின்று மாலை வேளையில் மின் விளக்கின் ஒளியில் மூன்று சந்நதிகளையும் ஒரு சேரக் காணலாம். பஞ்ச கங்கையை வலம் வரும் போது, அஷ்டபுஜ துர்கையின் அழகிய சிறு சந்நதியும் காணலாம்.அன்னை, சிவனார் தந்த இரு நாழி நெல்லால் பின் வரும் முப்பத்திரண்டு அறங்களை இயற்றினார்.
[ஆதாரம் – கச்சியப்ப முனிவரின் காஞ்சிப் புராணம்]
1. ஆவுரிஞ்சு தறி அமைத்தல்
2. பசுவிற்கு வாயுறை
3. துறந்தோர்க்கு உணவு
4. மகவளர்த்தல்
5. வேதம் ஓதுவித்தல்
6. மகப்பால் கொடுத்தல்
7. அறுவகைச் சமயத்தார்க்கு உண்டி கொடுத்தல்
8. கருவாய்த்த மகளிரைக் காத்தல்
9. ஒப்புரவு செய்தல்
10. மருந்து கொடுத்தல்
11. சோலை அமைத்தல்
12. நீர் நிலை அமைத்தல்
13. விலங்கிற்கு உணவு கொடுத்தல்
14. அறவுரை கேட்பித்தல்
15. தீக்ஷை கொடுத்தல்
16. அறவோர் இருக்கை அமைத்தல்
17. ஆதுலர்க்குச் சாலை அமைத்தல்
18. கன்னிகாதனம்
19. தீராக்கடன் தீர்த்தல்
20. தூர்த்தற்குதவுதல்
21. படுக்கை அளித்தல்
22. தண்ணீர்ப் பந்தல் அமைத்தல்
23. சிறார்க்கு உணவு அளித்தல்
24. இரப்போர்க்கு ஈதல்
25. அன்ன சத்திரம் அமைத்தல்
26. தின்பண்டம் வழங்குதல்
27. உடுக்க உடை வழங்குதல்
28. முன்னோர் அறங்கள் காத்தல்
29. அநாதைப் பிணம் அடக்கம் செய்தல்
30. விலைகொடுத்து உயிர் காத்தல்
31. ஆடை வெளுத்துக் கொடுத்தல்
32. மயிர் கழிப்பித்தல்
அருணகிரிநாதர் திருநள்ளாறு திருப்புகழில் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
“எக்குலம் குடிலோடுலகியாவையும்
இற்பதிந்திரு நாழி நெலால் அறம்
எப்பொதும் பகிர்வாள் குமரா என உருகேனோ…”
அதே போல்,
“ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி…”
– என்று அபிராமி அந்தாதியில் பாடுகிறார்.
“முப்பத்திரண்டறங்களும் கவின்பெறச் செய்யும் நின்னை” என்றும், “நியமமுடன் முப்பத்திரண்டறங்களும் வளர்க்கின்ற நீ மனைவியாய் இருந்தும்” என்றும் அபிராமி அம்மை பதிகத்தில் பாடுகிறார். காஞ்சி காமாட்சி கோயிலிலுள்ள முருகனைப் போற்றும் அழகிய பாடல் ஒன்றில்,
“……கஞ்சபாதம்
கருணை மிகுத்துக் கசிந்துளங்கொண்டு
கருதும் அவர்க்குப் பதங்கள் தந்தருள்
கவுரி திருக்கொட்டமர்ந்த இந்திரர் தம்பிரானே”
– என்கிறார்.
“தன் திருவடித் தாமரைகளை மனம் கசிந்து உள்ளத்தில் கொண்டு நினைக்கும் மெய்யடியார்களுக்கு நிறைந்த கருணையுடன் இந்திர பதம், பிரம்ம பதம், திருமால் பதம், ருத்ர பதம் முதலிய சிறந்த பதங்களைத் தந்தருள்கின்ற பொன்னிறமுடைய காமாட்சியின் திருக்கோயிலில் அமர்ந்து அருள்புரிகின்ற இந்திராதி இமையவர்க்கெல்லாம் தலைவராகிய முருகப் பெருமானே” என்கிறார்.“ஸகல க்ஷேத்ரங்களிலுள்ள அம்பாளுடைய சக்தி கலைகளுக்கெல்லாம் கேந்த்ர ஸ்தானமாயிருப்பது காஞ்சி காமாக்ஷிதான்! அந்த எல்லா ‘பல்புக்கும்’ இவள்தான் ‘ஜெனரேட்டர்’!
இதைத் தெரிவிப்பதாகத் தான் காஞ்சீபுர வட்டாரத்தில் ஐம்பதுக்கு மேலே சிவன் கோயில்கள் இருந்தாலும், எதிலேயும் அம்மன் சந்நதியே இல்லை! காமகோஷ்டத்திலோ, அம்பாள் மட்டுமாக இருக்கிறாள்! ஸுந்தரேஸ்வரர் கோயிலில் மீனாட்சி, ஜம்புகேஸ்வரர் கோயிலில் அகிலாண்டேஸ்வரி, கபாலீஸ்வரர் கோயிலில் கற்பகாம்பாள் என்கிற மாதிரியெல்லாம் இல்லாமல், கூட ஈஸ்வர சந்நதியில்லாமல், அம்பாள் மட்டும் இருக்கிறாள். காஞ்சியில் ஏகாம்பரர், வரதர் உட்பட, எவருக்கும் இல்லாத பெருமையாக, தான் மட்டுமே நாலு பக்கமும் கோபுரமும், கோபுர வாசலும்,
ராஜவீதிச் சுற்றுக்களும் கொண்ட ராஜ ராஜேஸ்வரியாக இருக்கிறாள்.” என்று கூறுகிறார்
ஸ்ரீ மஹா பெரியவாள் [ தெய்வத்தின் குரல் பாகம் 5]
மேலும், “ஈசுவரன், ஞானம் – வீரம் இரண்டிலும் தன்னைவிடத் தானே அதிக பிரகாசமான ரூபம் எடுத்துக்கொண்டு சுப்ரமண்யராக வந்ததற்குக் காரணம் அம்பாளின் சேர்க்கை தான்; காமன் எரிந்த பின் அவள் கரும்பு வில்லும், மலர் அம்பும் தரித்துக் காமேஸ்வரியாகி, இவரைத் தன்னிடம் அன்பு கொள்ள வைத்ததுதான் இத்தனைக்கும் காரணம். இந்தப் புராண கதைக்குத் திருஷ்டாந்தமாகவே இன்றைக்கும் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் ஆலயத்துக்கும், காமாட்சியம்மன் ஆலயத்துக்கும் நடுவே குமரகோட்டம் என்கிற சுப்ரமண்யர் ஆலயம் இருக்கிறது.
சோமாஸ்கந்த மூர்த்தத்தில் எப்படி ஈஸ்வரனுக்கும் உமாதேவிக்கும் நடுவில் ஸ்கந்தர் இருக்கிறாரோ, அப்படியே காஞ்சியில் காமாட்சியின் காமகோட்டம் அல்லது காமகோடிக்கும் ஏகாம்பரேஸ்
வரரின் ஆலயமான ருத்ரகோடிக்கும் மத்தியில் குமரகோட்டம் இருக்கிறது” என்பது நம் மஹாபெரியவாளின் வாக்கு; காமகோட்டத்திலிருந்து கிளம்பும் நாம் இனி குமரகோட்டத்தை நோக்கிச் செல்வோம்.
சித்ரா மூர்த்தி
