?நல்லபாம்பை தெய்வத்திற்கு சமமாக ஒப்பிடுவது ஏன்?
– எஸ்.கதிரேசன், வேலூர்.
சர்ப்பம் என்கிற பாம்பினை தெய்வங்களின் ஆபரணமாக உருவகப்படுத்தி இருப்பார்கள். நவகிரஹங்களில்கூட கேது என்கிற கிரஹத்தினை ஐந்து தலை நாகத்தின் தலையை உடையதாக வடிவமைத்து இருப்பார்கள். இந்த கேதுவைத்தான் ஞானகாரகன் என்றும் சொல்வார்கள். ஆக, ஞானத்தைத் தருவது கேது என்பதால் அந்த பாம்பின் வடிவத்தையே தெய்வ மூர்த்தங்களின் தலைப்பகுதியில் இடம் பிடித்திருப்பது போல் சித்தரித்திருப்பார்கள். அதே போல இரு நாகங்கள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருக்கும் உருவத்தினையும் சிலையாக வடிவமைத்து அதனை அரசமரத்தடியில் வைத்து வணங்கி வருவார்கள். குறிப்பாக, பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் இதனை வணங்கிவந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் சொல்வார்கள். இதற்குக் காரணம், மனிதனின் ஜீன்களை ஆராயும்போது டி.என்.ஏ, ஆர்.என்.ஏ ஆகியவை இரண்டு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும் அமைப்பாக உள்ளதாக விஞ்ஞானிகள் இன்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த உண்மையை அன்றே அறிந்திருந்த நம் முன்னோர்கள், இந்த அமைப்புதான் பிறப்பினைத் தருகிறது என்று அதனை வழிபட வலியுறுத்தினார்கள். அதேபோல நவகிரஹங்களில் உள்ள குருவை புத்ரகாரகன் என்று சொல்வார்கள். அந்த குருவிற்கு உரிய சமித்து ஆக அரச சமித்தினைச் சொல்வார்கள். ஆக, அரசமரம் என்பது புத்ரகாரகன் ஆகிய குருவின் ஆதிக்கத்தைப் பெற்றது.
அதனால்தான் புத்ரபாக்யம் வேண்டி வருவோர் அரசமரத்தின் அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் நாகங்களின் வடிவத்தை வணங்குகிறார்கள். அந்த பாம்புகள் வசிக்கும் புற்று உள்ள இடத்தில் தெய்வ சாந்நித்யம் இருப்பதாக நம்பினார்கள். மேலும், யோகிகள் குண்டலீனி என்கிற சக்தியானது நமக்குள் சுருட்டி வைக்கப்பட்ட பாம்பு போல் உள்ளது. அது மூலாதாரத்தில் இருந்து சகஸ்ராரம் வரையிலும் சக்தியாக பாய்கிறது. இந்த சுருட்டி வைக்கப்பட்ட சக்தியையே வெளியே பாம்பாக உருவகப்படுத்தி விளக்குகிறார்கள்.
பாம்பு வழிபாடு என்பது, மிகவும் ஆழமானது அதை மிகச் சரியான முறையில் புரிந்துக்கொள்ள வேண்டும். உலகம் முழுவதும், எண்ணில் அடங்கா நூல்கள் நாகர் வழிபாடு என்ற பெயரில் உள்ளன.
?பேரக்குழந்தைகள் நன்கு படித்து சிறந்த எதிர்காலம் காண உரிய வழிபாட்டுமுறையைக் கூறுங்கள்.
– டி.நரசிம்மராஜ், மதுரை.
பொதுவாக நாம் செய்யும் புண்ணிய காரியங்கள், தான தர்மங்கள் ஆகியவை நம்முடைய தலைமுறையை நல்லபடியாக வாழ வைக்கும். நல்ல மனிதர்களின் மனம் புண்படும்படியாக நடந்துகொண்டு, அவர்களிடம் இருந்து பெறும் சாபம் என்பது தலைமுறையை பாதிக்கும். மற்றபடி பேரக்குழந்தைகள் நன்கு படிக்க வேண்டுமானால் அவர்கள்தான் வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்காக நாம் வழிபாடு செய்வது என்பதெல்லாம் நம்முடைய நம்பிக்கைதானே தவிர, அதில் பெரிதாக பலன் என்பது கிடைக்காது. யாருக்கு உடல் பலம் பெற வேண்டுமோ அவர்கள்தானே உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவர்களுக்காக நாம் உடற்பயிற்சி செய்தால், அவர்களுடைய உடல் வலிமை பெற்றுவிடுமா? ஆக, குழந்தைகளை பாடங்களை புரிந்துகொண்டு படித்துவரச் சொல்லுங்கள். அத்துடன் தெய்வ வழிபாடு செய்வதற்கும் கற்றுத்தாருங்கள். குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவரையும், பிரக்ஞா தட்சிணாமூர்த்தி ஸ்வாமியையும் வணங்கி வருவது நல்லது.
?வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு கிடைக்கும்?
– ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
ஜாதகத்தில், நான்காம் பாவகம் வலிமையாக இருக்க பெற்றவர்கள் வாகனம் வாங்கும் யோகத்தினைப் பெற்றிருப்பார்கள். நான்கில் சுக்ரன் வலுப்பெற்றிருந்தால், உயர்ந்தரக வாகனத்தை வாங்குவார்கள். உடன் சனி இணைந்தால், அதனையே செகன்ட் ஹேண்ட் வாகனமாக வாங்குவார்கள். நான்காம் பாவகத்தையும் சுக்ரனையும் தொடர்புபடுத்தி வாகனம் வாங்கும் யோகத்தினை கணக்கிட இயலும். நான்காம் பாவகம் வலிமையிழந்து இருந்தாலும், செவ்வாயின் வலிமையைப் பெற்றவர்கள் வாகனத்தை சொந்தமாக வாங்க இயலாவிட்டாலும், வாகனத்தை இயக்கும் டிரைவர்களாக இருப்பார்கள். ஓட்டுனர் என்றாலே அவர்கள் ஜாதகத்தில் செவ்வாயின் வலிமை என்பது அதிகமாக இருக்கும்.
?சமையல் அறை, வீட்டின் எந்த திசையில் இருக்க வேண்டும்?
– வ.மீனாட்சிசுந்தரம், சிவகங்கை.
அக்னி மூலை என்று அழைக்கப்படும் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல் மனையின் அமைப்பு இல்லாமல் போனால், வாயு மூலையிலும் அமைக்கலாம். ஈசான மூலை என்று அழைக்கப்படும் வட கிழக்கு திசையில் சமையலறை அமைத்தால், அங்கே சுத்தபத்தமாக சமைக்க வேண்டும். பொதுவாக அக்னிமூலை என்று அழைக்கப்படும் தென்கிழக்கு மூலையில் சமையலறை அமைப்பதே நல்லது.
?கனகதாரா ஸ்தோதிரம் எப்போது படிக்க வேண்டும்?
– பொன்விழி, அன்னூர்.
தெய்வத்தை வணங்குவதற்கு நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா என்ன? தினந்தோறும் காலையில் பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து படிக்கலாம். அலுவலகம் செல்லும் பெண்கள் மாலையில் வீடு திரும்பியதும் முகம், கைகால்களை அலம்பிக்கொண்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து அம்பிகையை நினைத்து படிக்கலாம். நேரமில்லை என்றால் வெள்ளிக் கிழமையில் மட்டுமாவது படித்து வரலாம். இந்த நேரத்தில் மட்டும்தான் படிக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு ஏதும் கனகதாரா ஸ்தோத்ரத்திற்கு கிடையாது.
?சிலர் அடிக்கடி சாலை விபத்தில் சிக்குகிறார்கள். இது எந்த கிரஹத்தின் பாதிப்பால்?
– சு.ஆறுமுகம், கழுகுமலை.
ராகு என்கிற கிரஹத்தின் பாதிப்பு விபத்தில் சிக்க வைக்கிறது. சூரிய தசையில் ராகுபுக்தி நடந்தாலும், ராகுதசையில் சூரிய புக்தி நடந்தாலும், ஏதேனும் ஒரு வகையில் விபத்தினை சந்திக்க நேரும் என்பதால், சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் வலியுறுத்துவார்கள். சாலை விபத்து என்று வரும்போது செவ்வாய் மற்றும் ராகுவின் தோஷமான நிலை காரணமாகிறது.
