×

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்!

பண்டைய பாரதத்தின் பழம்பெரும் சூரியக்கோயில்கள்

காலம்: பொ.ஆ 1250ல் கீழை கங்க வம்ச மன்னர் முதலாம் நரசிங்க தேவனால் கட்டப்பட்டது.
அமைவிடம்: கொனார்க் சூரியக் கோயில், ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் உள்ள பூரி நகரத்திலிருந்து வடகிழக்கே சுமார் 35 கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது.இயற்கையில், சூரியனே முதன்மையானது என்பதால் சூரியனை வழிபடும் முறை உலகெங்கும் பண்டைக்காலம் முதலே இருந்து வருகிறது.

“…ஓங்கு திரை
முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்”
(நற்றிணை – 283 – கி.பி.3 -4 ஆம் நூற்றாண்டு)

என மதுரை மருதன் இளநாகனார் சூரியன் பழந்தமிழர் வழிபட்ட தெய்வமாக இருந்ததைக் கூறுகிறார். தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில், கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது.
“…ஞாயிறு போற்றுதும்! ஞாயிறுபோற்றுதும்
காவிரி நாடன் திகிரி போல் பொன்கோட்டு
மேரு வலந்திரிதலான்…”

சிலப்பதிகாரத்தில் (புகார்க் காண்டம் / கனாத்திறமுரைத்த காதை) தமிழகத்தில் ‘பகல்வாயில் உச்சிக் கிழான் கோட்டம்’ என்ற பெயரில் சூரியனுக்கான கோயில் இருந்ததைத் தெரிவிக்கிறது.

சூரியன்

வேதங்களின் குறிப்புகளின் படி, சூரியன் கிழக்கில் இருந்து எழும்புவதாகவும், ஏழு குதிரைகள் இழுக்கும் தேரில் வானத்தில் வேகமாக பயணிப்பதாகவும் குறிப்பிடப் படுகிறது. தேரோட்டியான அருணனால் செலுத்தப்படும் தேரில் ஏறி, இரண்டு கைகளிலும் தாமரை மலரை ஏந்தியபடி, பிரகாசமாக நிற்பவராக அவர் விவரிக்கப்படுகிறார்.சூரியனின் பக்கவாட்டில் உஷா மற்றும் பிரத்யுஷா ஆகிய உதயகால பெண்தெய்வங்கள் காணப்படுகின்றனர்.

சூரியக்கோயில்கள்

பண்டைய பாரதத்தில் சூரிய வழிபாட்டுக்கென அமைந்த பெரிய அளவிலான ஆலயங்களில் புகழ் பெற்றவை: வடக்கு திசையில் காஷ்மீர் மார்த்தாண்ட் சூரியக்கோயில் (பொ.ஆ.8 ஆம் நூற்றாண்டு), மேற்கில் குஜராத் மொதேரா சூரியக் கோயில் (பொ.ஆ.11 ஆம் நூற்றாண்டு) மற்றும் கிழக்கில் ஒடிசா கொனார்க் சூரியக்கோயில் (பொ.ஆ.13 ஆம் நூற்றாண்டு). மார்த்தாண்ட் சூரியக்கோயில்,

காஷ்மீர்

காஷ்மீரின் ஆன்மிக பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற சின்னமாகக் கருதப்படும் இவ்வாலயம், கர்கோடாக வம்சப்பேரரசர் லலிதாதித்ய முக்தபிடா (பொ.ஆ.724-760 ) என்பவரால் கட்டுவிக்கப்பட்டது. இன்றைய ஆப்கானிஸ்தானில் இருந்து வங்காளம் வரை பரவியிருந்த பெரும் நிலப்பரப்பை ஆட்சி செய்த பெரும் வீரரான லலிதாதித்யர், கர்கோடாக வம்சத்தின் மிகவும் புகழ் பெற்ற பேரரசர்களுள் ஒருவர். தன் போர் வெற்றிகளின் மூலம் அடைந்த பெருஞ்செல்வத்தைக்கொண்டு காஷ்மீர் பகுதியில் ஏராளமான ஆலயங்களை நிர்மாணித்தார்.

அவற்றில் பல விஷ்ணு ஆலயங்கள். சில சிவாலயங்களையும், புத்த விகாரங்களையும் கட்டி, அவற்றின் வழிபாடு, பராமரிப்புக்கென பலவேறு நிவந்தங்களையும் அளித்துள்ளார். அந்நியர் படையெடுப்பினால் இன்று அவற்றில் ஒரு சில மட்டுமே இடிபாடுகளுடன் எஞ்சியுள்ளன. லலிதாதித்யர் அமைத்த ஆலயங்களிலேயே மிகவும் பிரம்மாண்டமான கட்டுமான பொறியியலுடன் அமைக்கப்பட்டது மார்த்தாண்ட் சூரியக்கோயில்.

ஆலயக்கட்டுமானம்

220 அடி நீளமும் 142 அடி அகலமும் கொண்ட ஆலய வளாகத்தைச்சுற்றி திருச்சுற்றுடன் நடுவில் பெரும் கற்சுவர்களுடனும், பல அடுக்கு நெடுந்தூண்களுடன் பிரதான சந்நதி அமைந்துள்ளது. கருவறை, முக மண்டபம், அந்தராளம் என மூன்று அறைகளுடன் அமைந்த பழமையான காஷ்மீர ஆலயம் இதுவே. கருவறைக்கட்டிடத்தின் காஷ்மீரக்கட்டிடக்கலையின் தனித்துவமான பிரமிடு வடிவக்கூரையுடன் அமைந்திருந்ததை கட்டிட இடிபாடுகளின் மூலம் அறிய முடிகிறது.

கருவறையினுள் மூல தெய்வமான சூரியன் சிலை (சூரியனின் சிற்பம் தற்போது இல்லை) மீது நாள் முழுவதும் சூரிய வெளிச்சம் விழும் வகையில் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆய்வாளர் பெர்சி பிரவுன்(1872-1955), மார்த்தாண்ட் கோயிலின் கருவறையில் இருந்த சூரியக் கடவுளின் உயரமான உலோகத்திருமேனி செம்பு கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் எனக்கருதுகிறார்.

மண்டபத்தின் உட்புறச் சுவர்கள், பிற கடவுள்களான விஷ்ணு, இருபுறமும் நதிதேவியரான கங்கை மற்றும் யமுனை, அடையாளங்காண இயலாத வண்ணம் சிதைந்த வேறு சில தெய்வங்களும் சிறிய துணைக் கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சுற்று மாளிகை

இவ்வாலய வளாகத்தினுள் 84 பெரும் தூண்களுடன் கூடிய திருச்சுற்று மாளிகையினைக்காணுகையில் தஞ்சை பெருவுடையார் ஆலய திருச்சுற்று மாளிகை நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலவில்லை. ஏறக்குறைய அதே போன்ற அமைப்பியலுடன் ஆனால் உயர்த்தப்பட்ட அடித்தளம், பிரம்மாண்ட அலங்காரத்தூண்களுடன் வசீகரிக்கின்றது.

கிரேக்க பாணியில் அற்புதமாக செதுக்கப்பட்ட நெடுந்தூண்களின் கல் அடுக்கு இணைப்புக்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் மிக நுணுக்கமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. தூண்கள், வெளிப்புற சுவர் சிற்றாலயங்கள் மற்றும் அடித்தளத்தில் உள்ள பல சிற்பங்கள் அந்நியர் சூறையாடலினால் சிதைக்கப்பட்டும், இப்பகுதியின் கடுமையான வானிலை மாற்றங்களினால் முற்றிலும் அரிக்கப்பட்டுமுள்ளன.

ஆட்சியாளர் சிக்கந்தர் ஷா மிரியின் (1389-1413) உத்தரவின் பேரில் கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்ட இந்த அற்புதமான கலைக்கோயில் இப்போது இடிந்து, பாழடைந்து கிடக்கிறது. இந்திய தொல்லியல் துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இவ்வாலயத்திற்கு வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமே வருகை தருகின்றனர்.

அமைவிடம்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் மார்த்தாண்ட் சூரியக்கோவில் அமைந்துள்ளது.

காலம்: கர்கோடாக வம்சப்பேரரசர் லலிதாதித்ய முக்தபிடா (பொ.ஆ.724-760) மொதேரா சூரியக் கோயில்,

குஜராத்

சௌராஷ்டிராவை (குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதி) ஆண்ட (சாளுக்கிய) சோலங்கி வம்ச மன்னர் முதலாம் பீமதேவனால் மோதேரா நகரத்தில், கி.பி.1026ல் கட்டி சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தோற்றப்பொலிவுடன் வரவேற்கும் தோரண வாயில்கள், நட்சத்திர வடிவ ஆலய கட்டுமானம், கலை நுணுக்கங்களுடன் கூடிய நெடிய தூண்கள் தாங்கி நிற்கும் சபா மண்டபம், பேரழகு பொருந்திய சிற்பங்கள், 108 சிறுஆலயங்களுடன் கூடிய பிரம்மாண்ட `சூரிய குண்டம்’ படிக்கிணறு என கோயிலின் ஒவ்வொரு அம்சமும் ஆச்சரியமூட்டுகிறது.

வெளிப்புற சுவர்களெங்கும் அழகிய தெய்வ சிற்பங்கள் நிறைந்திருக்கும் இவ்வாலயம் அன்னியர் படையெடுப்புகளினால் சிதைக்கப்பட்டிருந்தாலும், அழிவின் மிச்சங்களிலும் அழகு கொட்டிக்கிடக்கின்றது. அமைக்கப்பட்ட கால கட்டத்தில் எத்தகைய எழிலுடன் இருந்திருக்கும் என்ற எண்ணம் எழாமல் இல்லை. ஆப்கானிய மன்னர் கஜினி முகமதுவின் பல்வேறு படையெடுப்புக்களின் போது, சோமநாதபுரம் சிவன் கோயிலை இடித்து, அங்குள்ள செல்வங்களை கவர்ந்து செல்லும் வழியில், மோதேராவில் இருந்த சூரியன் கோயிலும் அவரது தாக்குதலுக்கு உள்ளானது.

சௌராஷ்டிர தேச மன்னர்களாலும், வணிகர்களாலும் மோதேரா சூரியன் கோயில் மீண்டும் கலைநயத்துடன் புதுப்பிக்கப்பட்டாலும், கி.பி. 1299ல் அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பின் போது மோதேராவில் உள்ள சூரியன் கோயிலின் பகுதிகள் திரும்பவும் சேதப்படுத்தப்பட்டது.இரவும் பகலும் சமமான நேரம் கொண்ட நாட்களான 21 மார்ச் மற்றும் 21 செப்டம்பர் அன்று, இக்கோயில் கருவறையில், கிழக்கு நோக்கி அருள் புரியும் சூரியபகவான் விக்ரகம் இருந்த இடத்தின்மீது, காலை வேளையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் விழும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பு. ஆனால் இப்போது கருவறையில் சூரியன் சிலையே இல்லை. வெகுகாலத்திற்கு முன்பே விக்ரகம் அகற்றப்பட்டிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

குஜராத்தின் புகழ்பெற்ற படிக்கிணறுகளை நினைவூட்டும் வகையில் செவ்வக வடிவிலான `சூரிய குண்ட’ குளத்தில், விநாயகர், நடனம் ஆடும் சிவன், ஆதிசேஷ சயன விஷ்ணு, ஷீதாலா மாதா, பல்வேறு தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 108 சிற்றாலயங்கள் பக்தர்கள் நீராடிய பின்பு ஆலயம் சென்று வழிபடும் வண்ணம் குளத்தின் நாற்புறங்களிலும் பக்கவாட்டு படிக்கட்டுப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலின் வெளிப்புற சுவர்களில் உள்ள பல கோஷ்ட சிற்பங்கள் சிதிலமடைந்திருந்தாலும், 7 குதிரைகள் இழுத்துச்செல்லும் தேரின் மீது தனது மனைவியர் சஞ்சனா, சாயா சூழ நின்று காட்சியளிக்கும் சூரிய தேவன் சிற்பங்களின் எழிலில் நம் மனம் லயித்து விடுகிறது. இன்று வழிபாடு இல்லாத இவ்வாலயம், இந்திய தொல்லியல் துறையினரால் சிறப்பாக புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது.

ஆலயம்: மோதேரா சூரியன் கோயில், மெக்சானா மாவட்டம், குஜராத் மாநிலம்.காலம்: கி.பி.1026ல் (சாளுக்கிய) சோலங்கி வம்ச மன்னர் முதலாம் பீமதேவனால்
கட்டப்பட்டது.கொனார்க் சூரியக்கோயில், ஒடிசா`சூரிய தேவாலயம்’ என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோவில், பொ.ஆ 1250 இல் கீழை கங்க வம்ச மன்னர் முதலாம் நரசிங்க தேவனால் கட்டப்பட்டது.

கோயில் அமைப்பு

ஒடிசா கட்டிடக்கலையின் உச்சக்கட்டமாக விளங்கும் இக்கோயில், 24 சக்கரங்களுடன் கூடிய பிரமாண்டமான தேராகக் கட்டப்பட்டு, 7 குதிரைகளால் இழுக்கப்பட்டுச் செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலின் இருபுறமும் இரண்டு பெரிய சிங்கங்கள் பாதுகாத்து நிற்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு போர் யானையைக் கொன்று, அவற்றின் மீது நிற்கின்றன. ஒவ்வொரு யானைக்கு கீழேயும் ஒரு மனிதன் உள்ளான். மூல கோவிலின் கருவறை விமானம் 229 அடி உயரம் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 128 அடி உயரமுள்ள பிரதான பார்வையாளர் மண்டபம் (ஜகமோகனா) இன்னும் நிற்கிறது.

சூரிய கோவிலின் தேர்ச் சக்கரங்களில் நுண்ணிய வேலைப்பாடுகள் குறிப்பிடத்தக்கவை. விஷ்ணு, சிவன், கஜலட்சுமி, பார்வதி, கிருஷ்ணர், நரசிம்மர் மற்றும் பிற தெய்வ சிற்பங்கள் காணப்படுகின்றனர். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இக்கோவில், இந்திய தொல்லியல் துறையினரின் பராமரிப்பில் உள்ளது.கொனார்க் சூரியக் கோயில், இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், புதிய 10 ரூபாய் தாளின் பின்புறத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

மது ஜெகதீஷ்

Tags : Sun ,India ,King Narasimha Deva I ,Lower ,Konark Sun Temple ,Puri ,Puri district of ,Odisha ,
× RELATED திருப்புகழ் பஞ்சபூதத் தலங்கள்