×

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊராட்சி செயலர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி நிர்வாகத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் ஊராட்சி செயலாளர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி முதல் சென்னையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது வருத்தத்தையும், அதே நேரத்தில் நியாயமான போராட்டம் என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறது.

2018ம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஊராட்சி செயலாளர்களுக்கு இதுவரை முறையான ஊதிய மாற்றம் வழங்கப்படாததும், பல ஆண்டுகளாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் தொடர்ந்து தற்காலிக நிலைமையில் வைத்திருப்பது சரியல்ல. அரசின் அனைத்து திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் முக்கிய பொறுப்பு இவர்களிடமே இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வழங்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவுகள் ஆகியவை ஊராட்சி செயலாளர்களின் மன உறுதியை உடைக்கும் செயல்.

2018ல் நியமிக்கப்பட்டவர்களுக்கு உரிய ஊதிய விகித மாற்றத்தை வழங்கவும், அனைவருக்கும் பணி நிரந்தரம் மற்றும் ஓய்வூதிய பலன்களை உறுதி செய்யவும், போராட்ட காலத்தில் விதிக்கப்பட்ட அனைத்து ஒழுக்க நடவடிக்கைகளையும், சஸ்பெண்ட் உத்தரவுகளையும் உடனடியாக ரத்து செய்து, ஊராட்சி செயலாளர்களின் 12 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம். ஊராட்சி செயலாளர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு தேமுதிக முழு ஆதரவு அளித்து தொடர்ந்து துணை நிற்கும்.

Tags : Tamil Nadu government ,panchayat ,Premalatha ,Chennai ,DMDK ,General Secretary ,Premalatha Vijayakanth ,Tamil Nadu ,
× RELATED 4 மாவட்ட மக்கள், விவசாயிகளுக்கு...