×

பொய் செய்தி, வெறுப்பு பேச்சு ஏஐ மூலம் கண்காணிப்பு: கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் போலி செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மென்பொருளை செயல்படுத்த கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பெங்களூரு விதானசவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் மாநில சட்டத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறும்போது, ‘தகவல் தொழில்நுட்பம் மிகப்பெரிய வேகத்தில் வளர்ந்து வருகிறது.

சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை தடுக்க பாரம்பரிய தொழில்நுட்பம் போதுமானதாக இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் விரைவான நடவடிக்கைக்கு உதவும். இது போலி செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுகளை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும், தடுக்கவும் உதவும். சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்படும். ஆனால் பிரதான ஊடகங்களின் டிஜிட்டல் தளங்கள் இதில் உள்ளடக்கப்படாது.

போலி ஊடக நிறுவனங்கள் இதில் உள்ளடக்கப்படும். இதில் மனித தலையீடு இல்லை. அரசாங்கம் இதில் தலையிடுவதில்லை. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான மென்பொருள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்திற்காக மொத்தம் ரூ. 67,26,00,000 செலவில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சமூக ஊடக பகுப்பாய்வு தீர்வை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’ என்றார்.

Tags : Karnataka ,Cabinet ,Bengaluru ,Chief Minister ,Siddaramaiah ,Vidhana Soudha ,
× RELATED ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு..!