இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா மசூதியில் நேற்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் பலியானார்கள். 169 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ஷெஷாத் நகரில் தர்லாய் இமாம்பார்காவில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதி உள்ளது. மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தபோது மசூதியை நோக்கி மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். அவனை காவலாளி தடுத்துள்ளார். ஆனால் அந்த நபர் திடீரென வெடிகுண்டை இயக்க செய்துள்ளான்.
இதில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில் மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் உட்பட 31 பேர் உயிரிழந்தனர். 169 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்தது பற்றி அறிந்ததும் ராணுவம் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர். குண்டு வெடிப்பு நடந்த இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்பில் படுகாயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவ தேவைகளை சமாளிக்க மருத்துவமனைகளில் அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் தலால் சவுத்ரி சென்று பார்வையிட்டார்.
மசூதி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அதிபர் ஆசிப் அலி சர்தாரி அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனித குலத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளார். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் அல்லனா ராஜா நசீர் அப்பாஸ் ஆகியோரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், இந்த தாக்குதல் குறித்த விசாரணை நடந்து வருகிறது.
தாக்குதல் நடத்தியவர் ஒரு வெளிநாட்டவர்.தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் தீவிரவாத குழுவுடன் தொடர்பு உடைய தீவிரவாதி தாக்குதலில் ஈடுபட்டார் என தெரிவித்தன. இரண்டு மாதங்களுக்கு முன் இஸ்லாமாபாத்தின் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்ஸியோவேவ் இரண்டு நாள் பயணமாக நேற்று பாகிஸ்தான் வந்தார். அவரது வருகை சமயத்தில் தாக்குதல் நடந்துள்ளதால் பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
* இந்தியாவுக்கு தொடர்பு பாக்.அமைச்சர் சொல்கிறார்
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில்,’ குண்டுவெடிப்பு பயங்கரவாதி ஆப்கானிஸ்தானுக்கு பலமுறை பயணம் செய்து வந்திருப்பதை முதற்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தியாவிற்கும் தலிபான் ஆட்சிக்கும் இடையிலான தொடர்புகள் வெளிவரும் சான்றுகள் அம்பலப்படுத்துகிறது. பாகிஸ்தானை சீர்குலைக்கும் பரந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. அரசு உறுதியான பதில் அளிக்கும்’ என்றார்.
