×

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் வீடு முற்றுகை பயங்கர மோதல்; தடியடி: அரசு ஊழியர்கள் போராட்டம்

டாக்கா: வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் வீடு முற்றுகையிடப்பட்டது. அங்கு நடந்த மோதலில் பலர் படுகாயம் அடைந்தனர். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த வன்முறையால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அதன்பின் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. தற்போது பிப்.12ல் அங்கு பொதுத்ேதர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நேற்று முகமது யூனுஸ் வீட்டை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள். ஒன்பதாவது தேசிய ஊதிய விகிதத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர்கள் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அதிகாரப்பூர்வ இல்லமான ஜமுனாவுக்கு வெளியே முற்றுகையிட்டனர். நாடு முழுவதிலுமிருந்து வந்த போராட்டக்காரர்கள், ஷாஹீத் மினாரில் ஒன்றுகூடி, ஜமுனாவை நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களை தடுக்க ஷாபாக்கில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.

இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீஸ் தடுப்புகளை உடைத்து ஜமுனா நுழைவாயிலை நோக்கி முன்னேறினர். கூட்டத்தைக் கலைக்க போலீசார் தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை மற்றும் ஒலி கையெறி குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Tags : Bangladesh ,Interim Government Leader ,Mohammad Yunus ,Dhaka ,Sheikh Hasina ,India.… ,
× RELATED ரஷ்ய உளவுத்துறை அதிகாரி மீது துப்பாக்கிச் சூடு