×

குறுகிய கால வட்டி விகிதத்தில் மாற்றமில்லை டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழப்போருக்கு ரூ.25,000 இழப்பீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 5.25 சதவீதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழப்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25,000 இழப்பீடு வழங்குவதாக ரிசர்வ் வங்கிஅறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வுக் கூட்டம் நடத்துகிறது. இதில் வட்டி விகிதம் உட்பட பல்வேறு கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நடப்பு மாதத்துக்கான கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் நடந்தது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து சஞ்சய் மல்கோத்ரா கூறியதாவது: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. இது 5.25 சதவீதமாகவே நீடிக்கிறது. இந்த விகிதம் நீண்ட காலத்துக்கு நீடிக்கும். பின்னர் குறைக்கப்படலாம். அரசு சமீபத்தில் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20 அடிப்படை புள்ளிகள் உயரக்கூடும். அடுத்த நிதியாண்டில் அரசு வாங்கும் மொத்த கடன் ரூ. 17.2 லட்சம் கோடியாகவும், நிகரக் கடன் ரூ.11.73 லட்சம் கோடியாக இருக்கும்.

தரவு மையங்கள் தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க உதவும். பொருளாதார வளர்ச்சி, 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.9 சதவீதமாகவும், பண வீக்கம் 4 சதவீதமாகவும் இருக்கும். 2ம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாகவும், பண வீக்கம் 4.2 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், நடப்பு நிதியாண்டில் பண வீக்கம் 2.1 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றார்.

இதுபோல், டிஜிட்டல் மோசடியால் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச இழப்பீடாக ரூ.25,000 வழங்க பரிசீலிக்கப்படுவதாகவும் சஞ்சய் மல்கோத்ரா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: டிஜிட்டல் மோசடியால் பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் மோசடி பேர்வழிகளிடம் ஒரு முறை பாஸ்வேர்டு பகிர்ந்து கொண்ட பிறகும் வங்கி கணக்கில் பணம் இழந்தவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும்.

இந்தத் தொகை, ரூ.85,000 கோடி மதிப்பிலான டெபாசிட்தாரர் விழிப்புணர்வு நிதியில் இருந்து வழங்கப்படும். அதேநேரத்தில், ஒரு வாடிக்கையாளர் தனது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே இழப்பீடு பெற முடியும்., அதில் எந்தவிதமான தவறான உள்நோக்கமும் கண்டறியப்படக்கூடாது. அதாவது, வாடிக்கையாளர்கள் தாங்களாகவே முன்வந்து அல்லது வேறு யாரோ ஒருவரின் தூண்டுதலால் ஏமாற்றப்பட்டாலும், எந்தக் கேள்வியும் கேட்கப்படாமல், ரூ.25,000 வழங்கப்படும். அந்தப் பரிவர்த்தனை தற்செயலாக நடந்திருந்து, அவர்கள் பணத்தை இழந்திருந்தால், இழப்பீடு கிடைக்கும்.

இந்த மோசடி விவகாரத்தில் வாடிக்கையாளர்களுக்கும் பொறுப்பு இருக்க வேண்டும். மோசடித் தொகை ரூ.25,000 வரம்புக்குள் இருந்தால், அந்த தொகையில் 15 சதவீதத்தை வாடிக்கையாளர் தான் றே்க வேண்டும். அதிக மதிப்புள்ள மோசடியாக இருந்தால் அதிகபட்ச இழப்பீடு ரூ.25,000 என நிர்ணயிக்கப்படும். இது தொடர்பான வரைவு அறிக்கை, மக்கள் கருத்துக் கேட்புக்கா விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு சஞ்சய் மல்கோத்ரா கூறினார். அடுத்த நிதிக்கொள்கை கூட்டம் ஏப்ரல் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்க உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

* இணையதளம் பயன்படுத்துவோர் 86 சதவீதம் பேர்

* டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 9.42 லட்சம் சிம் கார்டுகள் மற்றும் 2,63,348 ஐஎம்இஐகள் முடக்கப்பட்டுள்ளன.

* டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு 1930 உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

* 23 லட்சம் அப்பாவி மக்கள் ரூ.23,000 கோடி இழந்தனர்
இந்தியாவில் டிஜிட்டல் மோசடி அதிகமாகி வருகிறது. சமீபத்தில் வெளியான புள்ளி விவரத்தின்படி, 2022ம் ஆண்டில் சைபர் கிரைம் டிஜிட்டல் மோசடியால் 10.29 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த 2024ம் ஆண்டில் இது 22.68 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், 2024ம் ஆண்டில் மட்டும் டிஜிட்டல் மோசடியில் அப்பாவி மக்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.23,000 கோடியை இழந்துள்ளனர் என அந்த புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

Tags : Reserve Bank of India ,Mumbai ,Reserve Bank ,
× RELATED 10 ஆண்டுகளில் ரயில்வே நிதி நிலைமை...