×

கடும் அமளி காரணமாக தொடர்ந்து 5வது நாளாக மக்களவை முடங்கியது: திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக தொடர்ந்து 5வது நாளாக மக்களவை நேற்றும் முடங்கியது. மக்களவையில் கடந்த 1ம் தேதி பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதிய புத்தகத்தை மேற்கோள் காட்டி பேச முயன்றார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி எம்பிக்கள் அமளி செய்து ராகுல் காந்தியை பேசவிடாமல் செய்தனர். இதனால் கடந்த 4 நாட்களாக அவை முடங்கியது. இந்த அமளியால், க பிரதமரின் பதிலுரை இல்லாமலேயே ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் மீதான விவாதத்தின் 2ம் நாளான நேற்று மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 4வது நிமிடத்திலேயே அவையை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார்.

இதன் பின்னர் பலமுறை அவை கூடிய போதும் அமளி தொடர்ந்ததால், அவை திங்கட்கிழமை வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 5வது நாளாக மக்களவை முடங்கியிருக்கிறது. முன்னதாக அமளிக்கு மத்தியில் சபாநாயகர் ஓம் பிர்லா பேசுகையில், ‘‘இப்படிப்பட்ட அவையை என்னால் நடத்த முடியாது. தற்போதைய கூட்டத்தொடரில் இடையூறுகளால் 19 மணி நேரம் 13 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் அவையை அவமதிக்கிறார்கள்’’ என தெரிவித்தார்.

* எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
மக்களவை முடங்கியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற நுழைவாயில் படிக்கட்டு பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பிக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், ‘சர்வாதிகாரத்தை சகித்துக் கொள்ள முடியாது’, ‘மோடி சரண்டர்’, ‘ஜனநாயக படுகொலையை நிறுத்துங்கள்’ என கோஷமிடப்பட்டது. மேலும், இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவை சிக்க வைப்பதற்கான பொறி என விமர்சித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் ‘பொறி ஒப்பந்தம்’ என எழுதப்பட்ட நீண்ட பேனரை ஏந்தி இருந்தனர்.

Tags : Lok Sabha ,New Delhi ,President ,1st ,Leader of the Opposition ,Rahul Gandhi… ,
× RELATED குறுகிய கால வட்டி விகிதத்தில்...