வருசநாடு: தேனி மாவட்டம், வருசநாடு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் வெள்ளிமலைப் பகுதியில் மூல வைகை உருவாகி, கடமலை-மயிலை ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக பாய்ந்து ஆண்டிபட்டி அருகே, வைகை அணையில் சேகரமாகிறது. இந்த ஆறு மூலம் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. ஆற்றில் உறைகிணறு அமைத்து 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.
இந்நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய மழை இல்லாததால், மூல வைகை ஆற்றில் நீர்வரத்து மிகவும் குறைந்துள்ளது. கோடைகாலம் தொடங்கினால் ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் நின்றுவிடும். அப்போது கிராமங்களின் குடிநீர் தேவையும் அதிகரிக்கும். அதே சமயம் வெயில் தாக்கம் காரணமாக நிலத்தடி நீர் குறைந்து உறை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, ஊராட்சி நிர்வாகங்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமங்களில் சேதமடைந்த குடிநீர் குழாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்கு முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
